
அப்போது இந்திய வீரர்கள் ஆரவாரமிட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். அவுட்டான விரக்தியில் இருந்த பென் ஸ்டோக்ஸ் இதை பார்த்து கோபமடைந்தார். வாய்க்குள் எதை, எதையோ முணுமுணுத்தபடி பெவிலியன் நோக்கி நடந்தார்.
இதைப்பார்த்த நம்மூர் ஆக்ரோஷ வீரரான விராட் கோஹ்லியும், பதிலுக்கு எதையோ கூறியது வீடியோக்களில் பதிவாகியிருந்தது. அப்போது அவர்கள் இருவரும் முறைத்துக் கொண்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் நடுவர்களால் எச்சரிக்கப்பட்டார்.
மோதல் :
இங்கிலாந்து ஆல்-அவுட் ஆனபிறகு, இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி 62 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். விக்கெட் வீழும்போது பவுலர்கள் ஆர்ப்பரிப்பது வழக்கம். ஆனால் பென் ஸ்டோக்ஸ், தனது கைகளால் திடீரென வாயை மூடிக் கொண்டு அப்படியே பிட்சில் நின்று கொண்டார். முதல் இன்னிங்சில் தான் முணுமுணுத்ததை நடுவர்கள் எச்சரித்ததை கேலி செய்யும் விதமாக, "நான் எதுவும் பேசலப்பா.." என்பதை போல பாவனை செய்வது போல இருந்தது ஸ்டோக்ஸ் செயல்.
கோஹ்லி பதிலடி :
இந்தியா தனது முதல் இன்னிங்சை முடித்த பிறகு, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அப்போது, பென் ஸ்டோக்ஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இப்போது, கோஹ்லியின் முறை. அவர் தனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து ‘மூச்' விடக்கூடாது என்ற தொனியில் செய்கை காட்டி பதிலடி கொடுத்தார். பென் ஸ்டோக்ஸ் பேசாமல் பெவிலியனுக்கு நடையை கட்டினார்.
ஆக்ரோஷ மைதானம் :
இந்திய-இங்கிலாந்து வீரர்கள் நடுவேயான இந்த மோதல் தற்போது ஹாட்-டாப்பிக்காகி, டெஸ்ட் போட்டியை ஆஷஷ் தொடர் போன்ற எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதேபோல இங்கிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஒருவரும், இந்தியாவின் ஆக்ரோஷ வீரர் ஒருவரும் தங்கள் எதிர்ப்பை மைதானத்தில் காட்டிய சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாது.
கங்குலி vs பிளிண்டாப் :
அந்த ஆக்ரோஷ இந்திய வீரர் வேறு யாருமல்ல, தவண்டு கொண்டிருந்த இந்திய அணியை, தனது ஆவேச கேப்டன்ஷிப் மூலம், வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்து விட்ட சவுரவ் கங்குலிதான். அவரிடம் மோதி, வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டவர் இங்கிலாந்தின் சர்ச்சைக்குறிய ஆல்-ரவுண்டர் ஆன்ட்ரூ பிளிண்டாப்.
இனிய நினைவுகள்:
கிரிக்கெட்டின் சில நிகழ்வுகளை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். கபில் தேவ் தனது கையில் உலக கோப்பையுடன் நிற்பது, உலக கோப்பை பைனலில், டோணி சிக்சர் மூலம் வெற்றிக்கான ரன்னை எட்டியது, உலககோப்பை போட்டியொன்றில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் பந்தை ஆப் சைடில் சச்சின் சிக்சருக்கு விளாசியது போன்றவை இந்திய ரசிகர்கள் இதயத்தை எப்போதும் பசுமையான நினைவுகள். அதில் ஒரு நினைவுதான், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சவுரவ் கங்குலி சட்டையை கழற்றி சுழற்றியதும்.
மறக்க முடியாத போட்டி:
அது 2002ம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரின் பைனல் போட்டி. கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தேறியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 325 ரன்களை குவித்தது. கங்குலி தலைமையிலான இந்திய அணிக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், அதுவும் இங்கிலாந்து பிட்சில் இதை எட்டுவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத பணி.
கோபக்கார கங்குலி:
ஓபனிங்கில் களமிறங்கிய கங்குலி ஆக்ரோஷம் காட்டி 43 பந்துகளில் 60 ரன்கள் விளாசி அவுட்டானார். சேவாக் 45 ரன்கள் எடுத்தார். அதன்பிறகுதான் ஆட்டம் கண்டது இந்தியா. தினேஷ் மோங்கியா 9 ரன்கள், சச்சின் 14, டிராவிட் 5 ரன்களில் நடையை கட்ட ஏறத்தாழ வெற்றி கொண்டாட்டத்தில் மிதந்தது இங்கிலாந்து. அப்போதுதான் களமிறங்கியது அந்த இளம் ஜோடி. பயமறியா அந்த இளங்கன்றுகளிடம் இங்கிலாந்து சரணடைந்தது. யுவராஜ் சிங் 69, முகமது கைப் 87 (நாட்அவுட்) ரன்களை குவித்ததன் மூலம், 2 விக்கெட் வித்தியாசத்திலான கடைசி ஓவர் திரில் வெற்றி இந்தியாவுக்கு பரிசாக கிடைத்தது.
ஆவேசம் vs ஆல்ரவுண்டர்:
பெவிலியனிலிருந்து வெற்றி தருணத்தை பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் கங்குலி, தனது சட்டையை கழற்றி சுற்றி, சுற்றி காண்பித்தார். இந்த காட்சியை எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது. கங்குலி இதை செய்ய காரணமாக இருந்தவர் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளிண்டாப். மும்பையில் அதற்கு முன்பு நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டியொன்றில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வென்றதும், பிளிண்டாப் தனது சட்டையை சுற்றியதே கங்குலி கோபத்திற்கு காரணம். இத்தனை வருடங்கள் கழித்து, அதேபோன்ற சூழல் இந்தியா-இங்கிலாந்து அணிகளில் தற்போது நிலவுகிறது. இப்போதும், இந்தியாவின் கேப்டன் ஒரு ஆவேச புலி. இங்கிலாந்தில் சீண்டுவதும் ஒரு ஆல்-ரவுண்டர்.
English summary:
Indian captain Virat Kohli and England’s premier all-rounder Ben Stokes are having a go at each other for the past three days. It was India’s most colourful captain Sourav Ganguly whose epic shirt waving at Lord’s balcony after 2002 Natwest final will be etched in cricket lovers’ memory forever.