மத்திய அரசின் செல்லா நோட்டு நடவடிக்கை, கடந்த எழுபதாண்டு இந்திய பொருளாதார வரலாற்றில் எடுக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசியல் பொருளாதார முடிவாகும். இது, அரசியல், சமுக பொருளாதார களங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
தொடக்கத்தில் இது கருப்புப் பணத்திற்கு எதிரான ஒரு "துல்லியமான தாக்குதல்" (Surgical Strike) என்று வர்ணிக்கப்பட்டாலும், இது ஏற்படுத்தியுள்ள மிகக்கடுமையான விளைவுகளை நோக்குகையில் இது அனைத்து தரப்பட்ட மக்களையும், துறைகளையும் தாக்கியுள்ள மேலும் தாக்கவிருக்கின்ற ஒரு "தரைவிரிப்பு குண்டுவீச்சு" (Carpet Bombing) என்றுதான் வர்ணிக்கவேண்டியுள்ளது.
இந்த நடவடிக்கையின் உலகளாவிய நியாயங்கள், நமது நாட்டில் அறிவிக்கப்பட்ட இதற்கான நோக்கங்கள், இந்த மாபெரும் நடவடிக்கையின் முழுபரிமானம், எந்தவித தயாரிப்புமின்றி இதை அமல்படுத்திய விதம், இவை அனைத்தும் ஏற்படுத்தும் விளைவுகளுக்கேற்ப அன்றாடம் மாற்றப்பட்டுவரும் புதிய புதிய விதிகள் மற்றும் நோக்கங்கள், இவற்றின் குறுகிய மற்றும் நீண்ட கால பலன்கள், மற்றும் பதிப்புகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
1.செல்லா நோட்டு: உலகளாவிய நியாங்கள்:
செல்லா நோட்டு நடவடிக்கையின் அவசியம் பற்றி மிகக்குறைவாகவேயுள்ள கோட்பாட்டு நியாயங்களிலிருந்தும், உலகநாடுகளின் அனுபவத்திலிருந்தும் நாம் சில அடிப்படையான உண்மைகளை நிறுவ முடியும்.
1.பொதுவாக இந்த நடவடிக்கை பழைய பணத்தை, ஏதோ ஒரு சில காரணத்துக்காக, மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்ற ஒரு பண ஒன்றியத்துக்கு மாறும்போது, அந்தந்த உறுப்பு நாடுகளின் பழைய பணங்களை அழித்து யுரோவுக்கு மாறினார்கள். இது 2002 இல் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, இதன் ஒரே ஒரு நோக்கம் பழைய பணங்களை அழித்து யூரோவுக்கு மாறுவது மட்டும்தான், வேறு எந்த நோக்கமும் கிடையாது. மேலும், பழைய பணங்களை கொடுத்து புதிய பணம் பெற மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த மூன்று மாதமும் பழைய பணம் புழக்கத்தில் தொடர அனுமதிக்கப்பட்டது. எனவே எந்த எதிர்விளைவுகளுமின்றி இந்த மாற்றம் எளிதாக நடந்தேறியது. இது போன்று பல நாடுகள் வெற்றிகரமாக இதை நிறைவேற்றியுள்ளன.
2.இந்த நடவடிக்கை எடுக்க மற்றுமொரு நோக்கம் உயர் பணவீக்கம் (Hyperinflation). அதாவது ஒரு நாட்டின் பண மதிப்பு, கடுமையான விலைவாசி உயர்வினால் அழிக்கப்படும்போது, இந்நடவடிக்கையின் மூலம் மதிப்பற்ற பழைய பணம் விலக்கப்பட்டு புதிய பணம் கொண்டுவரப்படும். முன்னாள் சோவியத் யூனியன், மற்றும் ஜெர்மன் நாடுகள் இக்காரணத்திற்காக இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளன.
மாறாக, கருப்பு பணம், கள்ள பணம், போன்ற காரணங்களுக்காக எந்த ஜனநாயக நாடும் இதுபோன்ற நடவடிக்கையினை எடுக்கவில்லை. அப்படி கருப்பு மற்றும் கள்ளப் பணத்தை இந்த நடவடிக்கை மூலம் ஒழிக்க முடியும் என்றல் அமெரிக்காதான் இது போன்ற நடவடிக்கையினை முதலில் எடுத்திருக்கும்; ஏனென்றால் அவர்கள்தான் இந்த இரு பிரச்சனைளையும் அதிகமாக சந்திக்கிறார்கள். இருந்தபோதும், 1867 இல் இருந்து இன்றுவரை ஒருமுறைகூட இதை அவர்கள் செய்ய துணியவில்லை. காரணம், பணம் என்பது ஒரு 'வாக்குறுதி'; அதை ஒரு அரசு கடைபிடிக்கும்போதுதான் மக்களுக்கு அந்த பணத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த நம்பிக்கையினை காக்கவே அமெரிக்க அரசு ஒருமுறைகூட இந்த நடவடிக்கையை எடுக்கத் துணியவில்லை. ஆனால், கருப்பு மற்றும் கள்ள பணத்தை அவர்கள் விசாரணை மற்றும் வழக்கு மூலமே களைய தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இதனால் தான் அமெரிக்க டாலர் இன்றும் ஒரு உலக பணமாக வலுவாக நிலவி வருகின்றது.
இந்தியா மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க இதுபோன்ற முயற்சியினை 1978இல் எடுத்து அதில் தோல்வியும் கண்டது.
மேலும், இந்தியாவில் பணப்புழக்கதின் அளவு மிக அதிகம். இந்தியாவின் பணப்புழக்கம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. அப்படியுள்ள நாடுகளில் இந்த நடவடிக்கையினை எடுக்க்க் கூடாது என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள். அப்படிப்பட்ட நாட்டில் இந்த நடவடிக்கை மிக மிக அதிக துன்பத்தை கொடுக்கும் என்பது வல்லுநர்களின் கருத்து.
2.செல்லா நோட்டு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நோக்கக்கங்கள்:
செல்லா நோட்டு நடவடிக்கைக்காக அரசால் சொல்லபடும் நோக்கக்கங்கள் நிலையற்றதாக மாறிக்கொண்டே வந்துள்ளது. எனினும், நவம்பர் 2016-ல் பிரதமர் உரையிலும், அதன் பின்னர் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட நோக்கங்கள் இரண்டு மட்டுமே, அவை கருப்பு பணம் மற்றும் கள்ளப் பண ஒழிப்பு. இந்த அறிவிப்புக்கு பின் பணமற்ற பரிவர்த்தனை ஒரு நோக்கமாக சொல்லப்பட்டது. பின்னர் இந்த நடவடிக்கை குறுகிய காலத்தில் துன்பத்தை கொடுத்தாலும், நீண்ட காலத்தில் பலன் கொடுக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த நீண்ட கால பலன்கள் என்னென்ன, அதற்கு ஒட்டுமொத்த மக்களும் நமது பொருளாதாரமும் கொடுத்துள்ள விலை என்ன என்பது பற்றி எந்தப் பதிலும் அரசிடம் இருந்து இதுநாள் வரை வரவில்லை. மாறாக, அனைத்து ஊடகங்களும், பல்வேறு இந்திய மற்றும் உலக பொருளாதார வல்லுநார்களும், தர நிர்ணய நிறுவனங்களும், இந்த நடவடிக்கையினை, அதன் பதிப்புகளை, விளைவுகளைப் பற்றி பல்வேறு விமர்சனகளை கூறிவந்தாலும் அரசு இன்றுவரை தான் எடுத்த நடவடிக்கையின் தவறையோ, மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினையோ, பொருளாதார விளைவுகள் பற்றியோ உணராமல், தனது நடவடிக்கையினை நியாயப்படுத்தியே பேசி வருகின்றது. இருந்த போதும், இதன் நோக்கங்கள் பற்றியும் அவற்றை அரசு அடைந்ததா இல்லையா எனபது பற்றியும் மேலும் பார்ப்போம்.
3. கருப்பு பணத்தின் அளவு மற்றும் வடிவம்:
கருப்பு பணத்தின் அளவு பற்றி எந்த மதிப்பீடும் இல்லை என்று அண்மையில் நிதியமைச்சர் கூறியிருந்தார். அப்படியானால், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் (Affidavit), புழக்கத்திலுள்ள மொத்த 500, 1000 ருபாய் மதிப்பான ரூபாய் 15.44 லட்சம் கோடி ரூபாயில், மூன்றிலிருந்து நான்கு லட்சம் கோடி ரூபாய் வரை கருப்பு பணம் இருப்பதாகவும், அது வங்கிக்கு வராது என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியது எப்படி என்ற கேள்வி எழுகின்றது. அல்லது, எந்த மதிப்பீடும் இல்லாமல் இந்த நடவடிக்கையில் எப்படி இறங்கினீர்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.
மற்றொருபுறம் NIPFP ( National Institute for Public Finance and Policy) என்ற மத்திய அரசின் பொதுநிதியியல் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளும் ஒரு சிறந்த நிறுவனம், 2014-ல் இந்தியாவிலுள்ள மொத்த கருப்பு பணத்தின் அளவு இந்தியாவின் GDP யில் 75 சதவிதம் என்று மதிப்பீடு செய்து அந்த அறிக்கையினை UPA ஆட்சிக் காலத்திலேயே மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. ஆனால், சென்ற அரசும் சரி இந்த அரசும் சரி அந்த அறிக்கையினை வெளியிடவில்லை. இந்த அரசு கருப்பு பணத்துக்கு எதிராக இருப்பது உண்மை என்றல், இந்த அறிக்கையினை வெளியிட ஏன் தயங்கவேண்டும். இப்படி ஒரு, தரமான மதிப்பீடு இருக்கும்போதே, எந்த மதிப்பீடும் இல்லை என்று ஏன் சொல்ல வேண்டும்.
மேலும் கருப்பு பணத்தின் வடிவம் பற்றி மேலும் பல தரமான ஆய்வுகள் உள்ளன. அதில் ஒரு முக்கிய ஆய்வு, தேவ் கர் (Dev Kar) என்ற ஒரு பொருளியல் வல்லுநரின் ஆய்வு. இதன்படி கருப்பு பணம் 95 சதவீதம் சொத்துக்களாக உள்ளன. மேலும் 2006 லிருந்து 2012 வரை நடத்தப்பட்ட திடீர் வருமானவரி சோதனைகளில் 95 சதவிதம் கருப்பு பணம் சொத்துக்களாகவே கைப்பற்றப்பட்டுள்ளன. ரொக்கப் பணத்தின் அளவு சராசரியாக 5 சதவீதமே கைப்பற்றப்பட்டுள்ளது.
இப்படி பெரும்பாலும் சொத்துக்களாக உள்ள 95 சதவீதம் கருப்பு பணத்தில் 72 சதவீதம் வெளி நாடுகளில் சொத்துக்களாகவும் ரொக்கமாக வெளிநாட்டு வங்கிகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 28 சதவீதம் உள்நாட்டில் சொத்துக்களாக உள்ளன. ஆக, ரொக்கமாக உள்ள கருப்பு பணம் என்பது மிக மிக சொற்பமான அளவே. இதற்கு காரணம், கருப்பு பணத்தை ரொக்கமாக வைத்திருந்தால் அது பணவீக்கத்தின் காரணமாக தனது மதிப்பினை இழக்கும். அதுவே, வீடு, நிலம், தங்கம், பங்கு பத்திரம், வெளி நாட்டு முதலீடு, என சொத்துக்களாக இருந்தால் அந்த பணம் மென்மேலும் வளரும். எனவே, யாரும் கருப்பு பணத்தை ரொக்கமாக வைத்திருக்க விரும்புவதில்லை. இது நாம் அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய, அரசுக்கு நன்கு தெரிந்துள்ள ஓர் உண்மை.
ஆக, ஒட்டுமொத்த கருப்பு பணம் சொத்துக்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும்போது ஓர் அரசு எதை நோக்கி தன் முதல் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்பது ஒரு சாமானியனுக்கு கூட விளங்க்க் கூடிய ஒரு விடயம். குறிப்பாக இந்த அரசு, வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை ஆட்சிக்கு வந்தால் உள்ளே கொண்டு வருவோம் என்று தனது வாக்குறுதியினை சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வழங்கியது. இது வரை அதில் ஒரு ரூபாய் கூட உள்ளே வராத ஒரு சூழலில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4. கள்ள பணத்தின் அளவு:
இந்தியாவில் கள்ள பணத்தின் அளவு அதிகரித்து வருவதாக மத்திய ரிசர்வ் வங்கி கூறிவருகிறது. 2013-14-ஆம் ஆண்டில் 4,88,273 கள்ள பண நோட்டுக்கள் பிடிபட்டதாகவும், 2014-15-ஆம் ஆண்டில் 5,94,446 கள்ள பண நோட்டுக்கள் பிடிபட்டதாகவும் கூறியது. இதில் 2,73,923 நோட்டுக்கள் ரூபாய் 500 ஆகவும் மற்றவை ரூ100, ரூ1000 நோட்டுக்களாகவும் இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியது. இவை நமது மொத்த பண நோட்டுக்களில் எவ்வளவு என்று பார்க்கவேண்டும். 2015 மார்ச் மாதம் முடிய ரூ100, ரூ500, ரூ1000 நோட்டுக்கள் முறையே 1,50,260 லட்சம் 1,31,280 லட்சம் மற்றும் 56,120 லட்சம் நோட்டுக்கள் ஆக மொத்தம் 3,37,660 லட்சம் நோட்டுக்கள் இருந்தன. இவற்றுடன் பிடிபட்ட கள்ளப் பண நோட்டுக்களை ஒப்பிட்டால் அவை ௦.௦௦18 % தான். இதனை பிடிப்பதற்கு இவ்வளவு துயரங்களை நாம் தாங்கவேண்டுமா? வேறுவிதமாக சொல்லவேண்டும் என்றால் மொத்த பண நோட்டுக்களில் ௦.௦௦18 % கள்ள பண நோட்டுக்களால் பெரிய பொருளாதார பாதிப்பு வராது, அதற்கு இவ்வளவு பெரிய இழப்பை நாம் சந்திக்கவேண்டியதில்லை.
5. செல்லா நோட்டு நடவடிக்கையின் முழுபரிமானம்:
2016 மார்ச் மாதம் முடிய நமது நாட்டின் மொத்த பணப் புழக்கத்தில் 1,57,070 லட்சம் 500 ரூபாய் நோட்டுக்களாகவும் மற்றும் 63,260 லட்சம் ரூ1000 நோட்டுக்களாகவும் இருந்தன. ஒட்டுமொத்தமாக இவற்றின் மதிப்பு ரூ 14,18,000 கோடியாகும். நாட்டின் மொத்த பண அளிப்பான ரூ 16,40,500 கோடியில் இது 86.4% ஆகும். இவ்வளவு பணத்தை ஒரே நாளில் செல்லாது என்று அறிவிப்பது மிகப் பெரிய பொருளாதார சிக்கலை உருவாக்கும் என்று அறிந்தும் இந்த முடிவை அரசு எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
6. திட்டமிடல் இல்லாத அமலாக்கம்
ஒரே நாளில் 2,20,330 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு எவ்வளவு முன்னேற்பாடு செய்யவேண்டும்? குறைந்தபட்சம் அதில் 50% நோட்டுக்களையாவது அச்சிட்ட பிறகு தானே செல்லா நோட்டு நடவடிக்கையில் இறங்கி இருக்கவேண்டும். இந்தியாவில் பல தொழில்கள் பண பரிவர்த்தனைக்கு வங்கிகளை நாடுவதில்லை. அவர்களை உடனடியாக வங்கி மூலம் பண பரிவர்த்தனை செய்யவேண்டும் என்று நிர்பந்திப்பது அவர்கள் தொழில்களை பெருமளவிற்கு பாதித்துள்ளது. மக்களும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
7. நிலையற்ற நோக்கங்களும் விதிமுறைகளும்:
சரியான திட்டமில்லாமல், மக்களின் துயரங்களை அதிகரிக்கும் இந்த செயல்பாட்டினால் பெரும் கண்டனத்திற்கு ஆரம்பம் முதலே மத்திய அரசு உள்ளாகியுள்ளது. திட்டத்தில் உள்ள குறைகளை நீக்காமல் மீண்டும் மீண்டும் பண மதிப்பு குறைத்தல் நடவடிக்கையின் நோக்கங்களை விவரிப்பதும், அதற்கு புதிய நோக்கங்களை கூறுவதும், என்று மத்திய அரசு நிலைமையை சமாளிக்க முயற்சிக்கிறது. கணினி மூலம் பணமற்ற பரிவர்த்தனை செய்வதால் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து வந்து கருப்பு பண உருவாக்கத்தை குறைக்கமுடியும் என்று அரசு கூறுகிறது. வங்கி வந்துள்ள வைப்பு நிதியை கொண்டு வட்டியை குறைத்து அதிக கடன்களை தொழில்முனைவோருக்கு கொடுக்கமுடியும், அதனால் பொருளாதாரம் உயரும் என்று கூறுகிறது. இதற்காக வங்கிகளில் பணத்தை எடுப்பதற்காக பல தடைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் ஏற்கனவே அதிக வைப்பு நிதி இருந்தும் சிறு குறு தொழில்களுக்கு, விவசாயத்திற்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை என்பது தானே பலரின் குற்றச்சாட்டு.
8. பணமற்ற பரிவர்த்தனை:
நாட்டில் ஐம்பது சதவீத மக்களுக்கே வங்கிக் கணக்கு உள்ளது. இதில் எழுபத்தைந்து சதவீத மக்களின் வங்கி கணக்குகள் செயல்படாத கணக்குகளாக உள்ளன. கணினி மயமாக்கப்பட்ட பண பரிவர்த்தனைக்கு தடையில்லாத மின்சாரம் எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கவேண்டும். அதே போல குறைந்த செலவில் அகன்ற அலைவரிசை இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் கிடைக்கவேண்டும். வர்தா புயலுக்கு பிறகு பல நாட்கள் இவை இரண்டும் இல்லாமால் சென்னை போன்ற பெருநகரங்கள் எவ்வளவு துயரங்களை சந்தித்தன என்று பார்த்தோம். பல லட்சம் கிராமங்களின் நிலை இதைவிட குறைவான மின்சார மற்றும் இணைய வசதிகளை உடையன, அவை எவ்வாறு கணினி மயமாக்கப்பட்ட பண பரிவர்த்தனைக்கு செல்லமுடியும் என்று யோசிக்காமலே இந்த முயற்சியை அரசு செய்ய முனைந்துள்ளது.
9. குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகள்:
குறுகிய காலத்தில் சிறு குறு வியாபாரங்கள் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. விவசாயம் போதுமான கடன் பெரும் வசதி இல்லாமல் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக எல்லா மாநில அரசுகளும் வரி வருவாயை இழந்து வருகின்றன. அரசு செய்யவேண்டிய பல நடவடிக்கைகளில் தடை ஏற்பட்டுள்ளது. கிராம நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பண பட்டுவாடா செய்யமுடியாமல் பல மாநில அரசுகள் தவிக்கின்றன. மறுத்த செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் தவிப்பதை செய்தித்தாள்கள் எழுதி தீர்த்துவிட்டன. வெளியூர் பயணங்கள் செய்வதை மக்கள் குறைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை இந்திய பொருளாதாரம் நீண்ட கால மந்த நிலையில் இருக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
10. இதன் உண்மையான நோக்கங்கள் பற்றி சில அனுமானங்கள்:
சொத்துக்களாகவும், வெளிநாட்டு வங்கிகளில் அந்நிய செலாவணிகளாகவும் இருக்கும் கருப்பு பணத்தை எடுக்க அரசு முயற்சிக்காமல், இந்தியாவில் உள்ள சிறு அளவான கருப்ப பணத்தை கண்டுபிடிப்பதாக சொல்லி இவ்வளவு பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு வேறு நோக்கங்கள் உள்ளனவா? என்ற சந்தேகம் எழுகிறது. அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள சில மாநில சட்டமன்ற தேர்தல்களில் எதிர்கட்சிகள் பண பட்டுவாடா செய்யாமல் இருக்க இந்த முயற்சியா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். இந்தியாவில் உள்ள பொருளாதார சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் எழுகிறது.
English summary:
Chellah note that federal action taken in the last seven decade history of the Indian economy as a major political and economic decision. The political, social and economic domains severe impact .