திருச்சி :திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையின் ஒரு அலகில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு வெடி பொருட்கள், தோட்டா தயாரிக்கும் 15 தொழிற்சாலைகள் உள்ளன.
இதில் ஒரு அலகில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. தொழிற்சாலையில் மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவிவருகிறது.
மீட்பு பணிகள் :
தோட்டா தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 6 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியிலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டன.
சிதறிய பாகங்கள்:
தீ விபத்து நடந்த தொழிற்சாலையின் அருகே பொதுமக்கள் யாரையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்பாகங்கள் துண்டு துண்டாக சிதறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 பேர் பலி:
காலை 7 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், தொழிற்சாலை வெடித்ததில் கற்கள் வெடித்து சிதறி 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்கள் கருகின:
உடல்களின் பாகங்கள் வெடித்து துண்டு துண்டாக சிதறியதால் உடல்களை சேகரிக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் தீ மளமளவென எரிந்தததால் பலரது உடல்கள் கருகியிருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
மழை, துர்நாற்றம்:
காலை முதல் மழை பெய்வதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு இதுவரை எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை என்று உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர்.
English summary :
10 workers were killed in an explosives blast in a factory near Trichy. Rescue teams have rushed to the factory.