நொய்டா,
தனியார் வங்கியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், போலி நிறுவனங்களின் கணக்கில் ரூ.60 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஒரு நகை வியாபாரிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
வருமான வரி சோதனை
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, கருப்பு பணத்துக்கு எதிரான வேட்டையை வருமான வரித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. ஆங்காங்கே, புதிய ரூ.2,000 நோட்டுகள் கோடிக்கணக்கில் பிடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லி அருகே நொய்டாவில் தனியார் துறையை சேர்ந்த ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரி அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.
ரூ.60 கோடி
அதில், 20 வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.60 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கணக்குகள், நடைமுறையில் இல்லாத நிறுவனங்கள் (போலி) பெயரில் தொடங்கப்பட்டு இருந்தன. அவற்றின் டைரக்டர்கள் யார் யார் என்று ஆய்வு செய்தபோது, குறைந்த வருவாய் கொண்ட ஊழியர்களும், தொழிலாளர்களுமே அதன் டைரக்டர்களாக காட்டப்பட்டு இருந்தனர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு, நொய்டாவை சேர்ந்த ஒரு நகை வியாபாரி, ரூ.600 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை விற்பனை செய்திருப்பதை வருமான வரித்துறையினர் ஏற்கனவே கண்டுபிடித்தனர்.
அவருக்கு அதே வங்கிக்கிளையில் கணக்கு உள்ளது. எனவே, தங்கம் விற்ற பணத்தை அவர் போலி நிறுவனங்கள் பெயரில் டெபாசிட் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே, கடந்த வாரம் டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் நடத்தப்பட்ட சோதனையில், 44 போலி கணக்குகளில் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஆக்சிஸ் வங்கியின் 19 அதிகாரிகளை வங்கி மேலிடம் சமீபத்தில் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டெல்லியில் அவ்வங்கியின் 2 அதிகாரிகளை அமலாக்கப்பிரிவு சமீபத்தில் கைது செய்தது. 3 கிலோ தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தது.
வங்கி லாக்கர்களில் ரூ.10 கோடி புதிய நோட்டு
இதற்கிடையே, மராட்டிய மாநிலம் புனேவில் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், அமெரிக்க எண்ணெய் வயல் சாதனங்கள் வினியோக நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமாக 15 லாக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில், ரூ.10 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2,000 நோட்டுகள் இருந்தன.
இந்த நோட்டுகளை நேற்று முன்தினம் பிற்பகலில் தொடங்கி, நேற்று காலையில்தான் எண்ணி முடித்தனர். செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகளில், இதுவே அதிக தொகை ஆகும். அது, கணக்கில் வராத பணம் என்பதால், அந்த லாக்கர்களை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
அதிகாரிகளுக்கு தொடர்பா?
சமீபகாலமாக, சில தனிநபர்கள் அந்த லாக்கர்களை அடிக்கடி திறந்து இயக்குவது, கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சம்பவத்தில், இப்போதைய நிலையில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். அதுபோல், வங்கிக்கு தொடர்பு இல்லை என்று வங்கி செய்தித்தொடர்பாளரும் மறுத்தார்.