சென்னை,
வர்தா புயல் காரணமாக சென்னையில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வர்தா புயலின் தாக்கம் இரவு 7 மணிவரையில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வர்தா புயல் வடதமிழ்நாடு கடலோர பகுதி மற்றும் தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு மிகஅருகே இன்று பிற்பகல் கரையை கடக்க தொடங்கியது. புயல் தாக்க தொடங்கியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்கிறது. சென்னையில் 108 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. வீட்டு கூரைகள், விளம்பர போர்டுகள் காற்றில் பறந்தன. சென்னையில் மின்சார ரெயில் சேவை அடியோடு துண்டிக்கப்பட்டது. விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
சூறாவளி காற்று காரணமாக சென்னை நகர மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வெளியே வர முடியாத அளவுக்கு அவர்கள் பீதியில் உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேத விவரம் உடனே தெரியவில்லை. மழை நின்ற பிறகே சேதவிவரம் தெரியவரும்.
புயல் கரையை கடப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழையும், மிக கனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கடக்கும்போது அதி தீவிரமாக இருக்கும் என்பதால் நாளை காலை வரை மிக கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 7 முதல் 19 செ.மீட்டர் வரை மழை யும், சில பகுதிகளில் 20 செ.மீட்டர் வரை மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு 105 பேர், காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 35 பேர், திருவள்ளூர் மாவட்டத் துக்கு 70 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். இவர்கள் உயிர் காக்கும் உப கரணங்கள், வெள்ள மீட்பு பணிக்கான அனைத்து உபகரணங்களுடன் சென்றுள்ளனர். இதேபோல மீட்பு பணிக்கு கப்பல், விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நீச்சல் வீரர்கள் கொண்ட 30 குழுக்கள், படகுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ரப்பர் படகுகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் உதவி பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு உதவுவதற்காக மாநில அளவில் 1070, மாவட்ட அளவில் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பேரிடர் தொடர்பான உதவியை நாடலாம்.
7 மணி வரையில்
வர்தா புயலானது கரையை கடக்க தொடங்கி விட்டது. இன்று மாலை 6.30 மணி, 7 மணி வரையில் வரை புயலின் தாக்கம் இருக்கும். புயலின் முதல் பகுதி தற்போது கடந்து வருகிறது. இது 2.30 வரையை கரையை கடக்கும். புயல் கரையை கடந்த பின்னர் அமைதியான சூழ்நிலை இருக்கும். பின்னர் மதியம் 3மணியில் இருந்து புயலின் மற்றொரு பகுதி கடக்க தொடங்கும். இந்த நிகழ்வானது மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை நீடிக்கும். இந்த புயல் கடக்கும் பகுதியானது மரக்காணம் முதல் ஸ்ரீஹரி கோடா வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.