புதுடெல்லி,
தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இந்தியாவில் இயங்கி கொண்டு, வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெற்று, அந்த நிதியை தவறாக பயன்படுத்தி பொது நலனுக்கு எதிராக செயல்படுவதாக சில தொண்டு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உளவுத்துறை விசாரணை நடத்தி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்தது. அதில் குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான தகவல்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் சமூக ஆர்வலர் சப்னம் ஹாஷ்மியின் ‘அன்ஹாத்’ தொண்டு நிறுவனம், மர்வார் கல்வி மற்றும் நல சங்கம், குஜராத்தை சேர்ந்த நவ்சர்ஜன் டிரஸ்ட், ஆமதாபாத் ஊரக வளர்ச்சி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட 7 தொண்டு நிறுவனங்களுக்கு அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அத்துடன் அந்த தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.