ஜெர்மனி பெர்லின் நகரில் திங்களன்று கிறிஸ்துமஸ் சந்தையில் லாரியை புகுத்தி 12 பேரைக்கொன்ற சந்தேக நபர் அனிஸ் அம்ரி இத்தாலியின் மிலன் நகரில் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளதுறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அந்த லாரியில் இருந்த கைரேகையும் சுட்டுக்கொல்லப்பட்டவரின் கைரேகையும் ஒத்துப்போவதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மார்கோ மின்னிட்டி தெரிவித்துள்ளார்.
இன்று (23-12-2016) வெள்ளிக்கிழமை விடியற்காலை மூன்றுமணிக்கு மிலன் நகர காவல்துறையினருக்கும் அம்ரிக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இரவு ரோந்து சென்று கொண்டிருந்த மிலன் நகர காவல்துறையினர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த அம்ரியைக் கண்டதாகவும், அவரது அடையாள அட்டையை காட்டும்படி காவலர்கள் கோரியபோது அவர் தனது பையில் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து இஸ்லாமிய கோஷமிட்டபடி காவலர்களை நோக்கி சரமாரியாக சுடத்துவங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
ஒன்பது மாதமாக பணியில் இருக்கும் பயிற்சி காவல்துறை அதிகாரி ஒருவர் பதிலுக்கு அம்ரியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காவல்துறை அதிகாரிக்கும் காயம் பட்டிருந்தாலும் அவரது காயங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பெர்லினில் நடந்த லாரி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.
English Summary:
Christmas market in Berlin on Monday, 12 people killed suspect in the truck through the Amri Anis interior minister shot dead by police in the city of Milan in Italy, the Italian minister said.