சென்னை : சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். இத்தகவல் நள்ளிரவு 12.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதல்வரின் மரணச் செய்தியால் தமிழக மக்களும், அவரது கட்சித் தொண்டர்களும் கண்ணீர் கடலில் மூழ்கினர். அ.தி.மு.க. தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் பார்வைக்கு வைக்கப்படுகிறது. முதல்வரின் மரணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல் நலக்குறைவு
முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் அக சுரப்பியல், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர், இதய சிகிச்சை நிபுணர், சுவாச சிகிச்சை நிபுணர், தீவிரசிகிச்சை மருத்துவ நிபுணர் ஆகியோரைக் கொண்ட மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது. அந்த குழுவினரின் தீவிர கண்காணிப்பில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் லண்டனில் உள்ள சர்வதேச மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் நடத்திய ஆலோசனைப்படி தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவக்குழு
முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அறிய நாட்டின் முதன்மை மருத்துவ கல்வி அமைப்பான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவக்குழு சென்னை வந்தது. அந்த குழுவில் இடம் பெற்றிருந்த நாட்டின் தலை சிறந்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவக்குழுவிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தனர். முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்த நிலையில், அவரை காண சில வாரங்களுக்கு முன் மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ வந்து முதல்வரின் சிகிச்சை வார்டுக்கு சென்று அவரது உடல் நிலை குறித்து கேட்டார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.
தலைவர்கள் விசாரித்தனர்
முதல்வரை சந்திக்க தமிழகத்தின் முக்கிய தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். டெல்லியில் இருந்து பா.ஜ.க தலைவர்கள் அமித் ஷா, வெங்கய்யா நாயுடு மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் சென்னை வந்து முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றனர். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பொது மக்களும் , கட்சித்தொண்டர்களும் கடந்த இரு மாதமாக தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
திடீர் மாரடைப்பு
முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில் அவர் தீவிரசிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பிசியோ தெரபி சிகிச் சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் மாலையில் அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவருக்கு இதய மருத்துவ நிபுணரும், சுவாசவியல் மருத்துவ நிபுணரும் சிகிச்சை அளிக்கிறார்கள் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருந்தது.
கவர்னர் வருகை
மேலும் முதல்வருக்கு இதய துடிப்பை சீராக்கும் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வரின் உடல் நிலை குறித்து மும்பையில் இருந்த தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனி விமானம் மூலம், உடனடியாக சென்னை புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு 10.50 மணியளவில் வந்தார். நள்ளிரவு 12 மணிக்கு அவர் அப்பல்லோ மருத்துவமனை சென்றார். முன்னதாக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தேற வேண்டும் என்பதற்காக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உள்பட பலரும் பிரார்த்தனை செய்தனர்.
தொண்டர்கள் குவிந்தனர்
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்தார். முதல்வரின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் ராஜ் நாத் சிங், ஜே.பி. நட்டா ஆகியோர் கேட்டறிந்தனர். இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில் அ.தி.மு.க தொண்டர்களும், பொது மக்களும் திரளாக குவிந்தனர். அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பாக மக்கள் குவிந்ததால், போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு முழுவதும் தொண்டர்கள் கவலையுடன் மருத்துவமனையிலேயே நின்று பிரார்த்தனை செய்தபடி இருந்தனர்.
உடல்நிலை கவலைக்கிடம்
இந்நிலையில், நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவரை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், கூறப்பட்டிருந்தது.
'எக்மோ' மூலம் சிகிச்சை
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் கருவியே எக்மோ. வழக்கமாக மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்தை இயங்கச்செய்ய செயற்கை சுவாச உதவியுடன் மார்பை அமுக்கி இயங்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த மரபு மருத்துவ சிகிச்சைக்கு பலன் இல்லையெனில் எக்மோ உயிர்காக்கும் கருவி பயனளிக்கும். இந்த கருவி மூலம் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சர்வதேச தரத்தில் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார். மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக அவரும் ஒப்புக்கொண்டார்.
இந்தநிலையில், சில தொலைக்காட்சிகளில் முதல்வரை பற்றி சில செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை முதலில் நம்பிய மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், சற்று நேரத்திலேயே அப்பல்லோ மருத்துவமனை ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டது.
அப்பல்லோ அறிக்கை
அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்களும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால், சில தொலைக்காட்சிகளில் முதல்வரை பற்றி தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த செய்திகள் அடிப்படையற்றவை, தவறானவை ஆகவே, தொலைக்காட்சிகள் தங்களது தவறை திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் முதல்வர் ஜெயலலிதா இரவு 11.30 மணிக்கு காலமானதாக அதே அப்பல்லோ மருத்துவமனை நள்ளிரவு 12.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அப்பல்லோ செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது.,
வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று இரவு (நேற்று) 11.30 மணிக்கு காலமானார் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம். முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சைக்கு முதல்வர் ஜெயலலிதா நல்ல ஒத்துழைப்பு அளித்து வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கமான உணவை உட்கொண்டார். அதன்பிறகு, அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
எங்களது மருத்துவ நிபுணர்களின் தொடர் கண்காணிப்பால் முதல்வரின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக முதல்வருக்கு கடந்த 4-ம் தேதி மாலையில் தீவிர மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு 'எக்மோ' கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற நாங்கள் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால், அவற்றையும் தாண்டி அவரை நோயிலிருந்து மீட்க இயலாமல் போய்விட்டது. இதையடுத்து, இன்றிரவு (நேற்றிரவு) 11.30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதா காலமானார்.
அப்பல்லோ குடும்பத்தில் உள்ள அனைவரும் முதல்வருக்கு உயர்தர சிகிச்சை அளித்தோம். இக்குடும்பத்தில் அனைவரும் களைப்பின்றி ஓய்வின்றி முதல்வரை காப்பாற்றுவதற்காக போராடினோம், பணியாற்றினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது இயலாமல் போய்விட்டது. எனவே தமிழக மக்களின் துயரம் மற்றும் இந்த தேசத்தின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வரின் மரணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இன்று நல்லடக்கம்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் நடக்கின்றன. அதன்பிறகு, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
7 நாள் துக்கம்
முதல்வரின் மரணச் செய்தி வெளியானதும், அ.தி.மு.க கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. முதல்வரின் மறைவையடுத்து 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், புதுச்சேரியில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று இரவு கிரீம்ஸ் சாலையில் இருந்து போயஸ் தோட்டம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் முதல்வரின் உடல் அவரது இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
கண்ணீர் கடலில் மக்கள்
முதல்வரின் மறைவையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அரசு செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றனர். முதல்வரின் மரணச் செய்தியை அறிந்ததும் தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது. முன்னதாக நேற்று மாலையே தமிழகம் முழுவதும் கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு தமிழகம் வெறிச்சோடியது. சுருக்கமாக சொன்னால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
English Summary : Chief Minister Jayalalithaa has passed away - tears volunteers floating in the ocean - the public.Chennai, Apollo Hospital undergoing treatment for the last 75 days, the Chief Minister, who is receiving treatment died at around 11.30 last night. This information was officially announced at 12.15 midnight. If the people of Tamil Nadu Chief Minister's death, drowned in the sea of tears and his party apparatchik. Digg Volunteers wept before Apollo Hospital was touching. Chief Minister Jayalalithaa Chennai Rajaji Hall for a tribute to the public's health is placed at the sight. Throughout the school following the death of Chief Minister of Tamil Nadu, colleges are given 3 days off. Chief Minister Jayalalithaa on the death of President Pranab Mukherjee, Prime Minister Narendra Modi condoled the leaders.