புதுடெல்லி: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு அரசு ரூ.1 கோடி அதிர்ஷ்டப் பரிசு அறிவித்துள்ளது. ரொக்க பரிவர்த்தனைகளை குறைத்துக்கொண்டு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, இ-வாலட் மற்றும் மொபைல் ஆப் மூலமான மின்னணு பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்கள் மாற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ரொக்கப்பரிசு வழங்கும் 2 புதிய திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் சிஇஒ அமிதாப் கான்ட் கூறியதாவது; மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ‘லக்கி கிராக் யோஜனா’ மற்றும் ‘டிஜி தன் வியாபாரி யோஜனா’ என்னும் 2 புதிய திட்டங்கள் வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. லக்கி கிராக் யோஜனா திட்டத்தின் கீழ் தொடர்ந்து தினந்தோறும் 15 ஆயிரம் நுகர்வோர் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.1000 பரிசு வழங்கப்படும். இத்திட்டம் வரும் 25ம் தேதி முதல் தொடர்ந்து 100 நாட்களுக்கு செயல்படுத்தப்படும். இதுமட்டுமன்றி பம்பர் பரிசாக, வாரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
இதேபோல் டிஜி தன் யோஜனா திட்டத்தின் கீழ் வாரந்தோறும் 7 ஆயிரம் வியாபாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.50 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும்.
இதுமட்டுன்றி மெகா பரிசாக ஏப்ரல் 14ம் தேதி ரூ.ஒரு கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 8ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நுகர்வோர் மேற்கொள்ளும் அனைத்து மின்னணு பரிவர்த்தனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் பரிசாக ரூ.1 கோடி, 2வது பரிசாக ரூ.50 லட்சம் மற்றும் 3வது பரிசாக ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
இதேபோல் வியாபாரிகளுக்கும் மெகா பரிசாக ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் வழங்கப்படும். ரூ.50 முதல் ரூ.3000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பரிசு வெல்வதற்கான திட்டத்தில் கணக்கில் கொள்ளப்படும். மேலும் அனைத்து நுகர்வோரும் வியாபாரிகளுக்கு செலுத்துவது, வியாபாரிகள் அரசுக்கு செலுத்துவது மற்றும் அனைத்து ஆதார் அட்டை மூலமான பரிவர்த்தனைகள் இந்த திட்டத்தின்கீழ் அடங்கும். இதன் மூலம் அரசுக்கு ரூ.340 கோடி செலவாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்
English Summary:
New Delhi: debit and credit card transactions during the cash prize to the government has announced Rs 1 crore of chance.