சென்னை, ஒரே ஆண்டில் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 16 லட்சம் பேர் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான வித்யாசாகர்ராவ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
இடம் ஒதுக்கி தந்த முதல்வர்
எல்லோருக்கும் எப்போதும் உயர்கல்வி என்ற தொலை நோக்கு சிந்தனையுடன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தினை தோற்றுவித்தவர் முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் மையப்பகுதியில் இடம் ஒதுக்கி தந்து அதற்கென தனிவளாகம் அமைத்து தந்து திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மகுடம் சூட்டியவர் முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் தொலைநிலைக் கல்விப் பாடத்திட்டத் திட்டங்களை ஒரே மாதிரியான தரத்தில் நெறிப்படுத்தி வழங்க கூடிய பொறுப்பினை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திடம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7 லட்சம் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்று வருகின்றனர்.
மேலை நாடுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்போர் எண்ணிக்கை மிக அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள், பொருளாதாரத்துறையினர், அறவியல் துறையினர் என்று அனைவரும் தங்களின் அறிவு விரிவாக்கத்திற்கு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தினையே நாடுகின்றனர். அந்த வகையில் பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. அப்படிப்பட்ட அடையாளத்ததை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் பெற வேண்டும்.
மாணவர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், மென்திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் எளிதில் வேலையை பெற முடியும். கடந்த ஆண்டு மட்டும் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 15.95 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். மோட்டார் வாகனத் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த உதிரி தொழில்களில் மட்டும் 2017க்குள் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என அவர் பேசினார்.
சாந்தா புகழாரம்
இந்த பட்டமளிப்பு விழாவில் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் சாந்தா பேருரையாற்றி பேசும்போது., தமிழகத்தில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவதற்காக 2002-ம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. அதில் தொழில் திறன் சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கியதன் மூலம் பெருமளவிலான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதற்காக தமிழக அரசுக்கும், பல்கலைக் கழகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
முதல்வருக்கு பாராட்டு
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு நிதியுதவி, சிறப்பு வகுப்பறைகள், மொழி ஆய்வகங்கள், கலைத்திட்ட மேம்பாடுகள், ஊட்ட சத்துடன் கூடிய மதிய உணவுத் திட்டம், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவித்தொகை, வெளிநாடுகளில் பயிலும் வாய்ப்புகள் என எத்தனையோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் புத்கதம், தேர்வு, விளையாட்டு என்பதோடு வெறுமனே கற்பிக்கும் இடம் மட்டுமாக இருக்காமல், உங்கள் திறன் வளர்க்கும் மையங்களாவும் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
14,060 பேருக்கு பட்டம்
இந்த பட்டமளிப்பு விழாவில் 3,522 முதுகலைப்பட்டமும், 7,659 இளங்கலைப் பட்டமும், 2,725 பட்டயமும், 154 முதுநிலை பட்டயமும் என 14 ஆயிரத்து 60 பேருக்கு வழங்கப்பட்டன. இவர்களில் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்ற 142 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை தமிழக ஆளுர் வித்யாசாகர்ராவ் வழங்கினார். அதேபோல், கனடாவில் உள்ள காமன்வெல்த் கல்விக் கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பாடத்திற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் 25 ஆயிரம் பரிசுத் தொகையை இளநிலை கம்ப்யூட்டர் பயன்பாடு பாடத்தை படித்த மாணவி முத்துவுக்கு வழங்கப்பட்டது.
English Summary: In the same year, 16 lakh 37 thousand professional people to work through institutions: the prerogative of the Minister of Information.37 thousand in the same year, 16 million people are employed by companies that are getting the chance to work in Tamil Nadu Open University graduation ceremony, Higher Education Minister KP Said prerogative.