ஜன் தன் திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளை, கருப்புப் பணம் வைத்திருப்போர் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக, அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுதாக மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னர், ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது.
மொத்தமுள்ள 25.68 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் நவம்பர் 9-ஆம் தேதி நிலவரப்படி சுமார் ரூ.45 ஆயிரம் கோடி இருந்த நிலையில், நவம்பர் 23-ஆம் தேதி இத்தொகை ரூ.72 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. அதாவது, 14 நாள்களில் மட்டும் ரூ.27 ஆயிரம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது.
கிராமப் புறங்களில் எந்த பணமும் இல்லாமல் இருந்த ஜன் தன் வங்கிக் கணக்குகளில் நவ.10-ஆம் தேதிக்கு பிறகு அதிக தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கருப்புப் பணம் வைத்திருப்போர், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு கமிஷன் தருவதாகக் கூறி, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் தங்களது பணத்தை செலுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, ஜன் தன் வங்கிக் கணக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக தாற்காலிக கட்டுப்பாடுகளை ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆர்பிஐ புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமரின் ஜன் தன் திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்போரை, மோசடியாளர்களிடம் இருந்து காப்பதற்காக, அந்த வங்கிக் கணக்கு செயல்பாடுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் இருந்து மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமெனில், வங்கி மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும். வங்கியில் தங்களைப் பற்றி முழு விவரம் தராத ஜன் தன் வங்கி கணக்குதாரர்கள், மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். டெபாசிட்டை பொருத்த வரை, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ.50 ஆயிரம் வரையே செலுத்த முடியும் என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary : In an attempt to curb black money, high-value banknotes withdrawn from federal government announced on 8th. After this operation, the amount deposited in bank accounts increased significantly to Jandhan.