தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முழுவீச்சில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மூன்று மாவட்டங்களிலும் புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,000 கோடி தேவை என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
7,127 குடிசைகள் சேதம்: வர்தா புயலில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். 1,388 குடிசைகள் முழுமையாகவும், 5,739 குடிசைகள் பகுதியாகவும் என மொத்தம் 7,127 குடிசைகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் 13,000 பேர்: சென்னை துறைமுகம் அருகே 130 கி.மீ. வேகத்தில் திங்கள்கிழமை மாலை கரையைக் கடந்த வர்தா புயலால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஓரிரு நாள்களில் மின்சாரம்: புயல் காரணமாக, மூன்று மாவட்டங்களின் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 450 மின் மாற்றிகளும், மூன்று மின் கடத்தி கோபுரங்களும் (230 கேவிஏ) சேதமடைந்துள்ளன.
10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்மாற்றிகள், மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளில் 9 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு விடும். ஆனாலும், சென்னை புறநகர்ப் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டு அதன் பிறகே மின் விநியோகம் செய்ய முடியும். இதற்கு ஓரிரு நாள்கள் ஆகும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள மாநகர-நகர சாலைப் பகுதிகளுக்குள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளன. மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் 275 மின் அறுவை இயந்திரங்களும், 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், 8 ஆயிரத்து 400 பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் பயணிகள் 150 பேருந்துகள் மூலம் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆவின் பால் விநியோகம் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படுகிறது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சரக்கு பெட்டகம் அடங்கிய லாரிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள், திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் முதல் பிரதான சாலையில் சாய்ந்த பிரமாண்டமான மின்மாற்றி. உருக்குலைந்துள்ள அகில இந்திய வானொலியின் கோபுரம். சென்னை ஆலப்பாக்கம் பிரதான சாலை லட்சுமி நகரில் வர்தா புயலில் உருக்குலைந்த பெட்ரோல் நிலையம். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவலர் குடியிருப்பு காவல் நிலையம் அருகில் வேருடன் சாய்ந்த மரம். நாள்.
English Summary : Overhauls in full swing: in the first instance review. Varta storm victims in Tamil Nadu, Chennai, Kanchipuram and Thiruvallur districts in three overhauls are being carried out in full swing. These three districts increased to 16 the number of victims trapped in the storm.