அருணாசலப் பிரதேசத்தில் ரூ.450 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள மின்சாரத் திட்ட ஊழலில் தொடர்புடைய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. எனினும், தனக்கு எதிராக கற்பனையான கட்டுக்கதைகளைப் புனைவோர் ஷூக்களால் அடிபடுவார்கள் என்று ரிஜிஜு தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான கிரண் ரிஜிஜு, மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். தவாங் மக்களவைத் தொகுதி எம்.பி.யான ரிஜிஜு, அவரது உறவினர் கோபோய் ரிஜிஜு, மத்திய அரசு நிறுவனமான நீப்கோ-வின் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட 8 அதிகாரிகள் ஆகியோர் கமேங் நீர் மின் திட்டத்துக்காக 2 அணைகளைக் கட்டுவதில் ஊழல் புரிந்துள்ளதாக அருணாசலப் பிரதேச தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி சதீஷ் வர்மா 129 பக்க அறிக்கையை சில மாதங்களுக்கு முன் சமர்ப்பித்தார்.
இந்த விவகாரத்தில் நீப்கோ நிறுவனத்தையும் மத்திய அரசையும் ஏமாற்றி ரூ.450 கோடி அளவுக்கு கையாடல் நடைபெற்றதாகவும், இதில் நீப்கோ நிறுவன அதிகாரிகள், மேற்கு கமேங் நிர்வாக அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்குத் தொடர்பு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிக்கை, சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் மத்திய எரிசக்தித் துறைக்கு கடந்த ஜூலை மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
நீர்மின் திட்டத்துக்கான அணைகள் கட்டுமானம் தொடர்பாக துணை ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகையைச் செலுத்துமாறு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதன் மூலம், இந்த முறைகேட்டில் அவருக்குத் தொடர்பு உள்ளது என்பது நிரூபணமாவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் கிரண் ரிஜிஜுவின் பங்கு என்பது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. மத்திய அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கான உரிமை அவருக்கு இல்லை. இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தி முடிக்கப்படும் வரை அவரை பிரதமர் நரேந்திர மோடி பதவிநீக்கம் செய்ய வேண்டும்; அல்லது ராஜிநாமா செய்யுமாறு கிரண் ரிஜிஜுவை மோடி வலியுறுத்த வேண்டும். வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை குறித்து மோடி பேசி வருவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரங்களில் அவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மிகவும் தீவிரமான இந்த விவகாரத்தில் பிரதமர் கருத்து கூறியாக வேண்டும் என்றார் சுர்ஜேவாலா.
பாஜக பதிலடி: இதனிடையே, ரிஜிஜு மீதான குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது: சம்பந்தப்பட்ட நீர் மின் திட்டத்துக்கு மத்தியிலும், அருணாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி புரிந்தபோதுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அக்கட்சி தனது பாவங்களுக்காக தற்போது ரிஜிஜு மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறது என்றார் அவர்.
கிரண் ரிஜிஜு திட்டவட்ட மறுப்பு
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ரிஜிஜு, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுபோன்ற கட்டுக்கதைகளை உருவாக்கிப் பரப்புவோர் எங்கள் பகுதிக்கு வந்தால் அவர்கள் ஷூக்களால் அடிபடுவார்கள். அருணாசலப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள எனது தொகுதியைச் சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட நீர் மின் திட்டப் பணிகள் தொடர்பாக தங்களுக்குத் தரப்படாமல் நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகை குறித்து என்னிடம் எடுத்துக் கூறினார்கள். அதன் பிறகே நான் அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். இந்த விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார் அவர்.
English Summary : Rs 450 crore power project scam Complaint: Central Minister Urges Congress to remove.