ஐ.நா : அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
வடகொரியாவிற்கு கண்டனம்
ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி 5-வது முறையாக மிகப்பெரிய அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது. இது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்வதால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
புதிய பொருளாதார தடை
இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடைபெற்றது. அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு, சீனா முன்னரே ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதார விதிக்கும் தீர்மானத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் அனைத்து நாடுகளும் ஒருமனதாக தங்கள் ஆதரவை தெரிவித்தன. இதனையடுத்து, நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பொருட்களுக்கு இந்த தடை பொருந்தாது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான்-கி-மூன் வலியுறுத்தல்
தீர்மானம் நிறைவேறியப் பின் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கூறுகையில், இதுவொரு ஐயப்பாட்டுக்கு, இடமில்லாத தெளிவான தீர்மானம் என குறிப்பிட்டார். அணுஆயுதம் தொடர்பான சோதனைகளை வடகொரியா இனி தொடரக்கூடாது எனவும், உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற அந்நாடு முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வடகொரியா மீது, கடந்த 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary : The economic embargo on North Korea - UN Security Council approval.North Korea nuclear test had been threatened by the nations of the world, the UN resolution on new sanctions Security Council approved unanimously.