சென்னை : சென்னையை வர்தா புயல் தாக்கிய போதிலும், தமிழக அரசின் 100 சதவீத முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. சாலையோரம் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
2 நாட்களுக்கு மழை நீடிக்கும் :
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த அதிதீவிர வர்தா புயலின் மேற்குப் பகுதி நேற்று முன் தினம் பிற்பகல் 2 மணி அளவில் கரையைக் கடந்தது. அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து, வர்தா அதிவேகப் புயலின் மையப் பகுதி சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. இதனைத்தொடர்ந்து, புயலின் கிழக்குப் பகுதி மாலை 3 மணிமுதல் 5.30 மணி வரை கரையைக் கடந்தது. அப்போது, காற்றின் வேகம் அதிகரித்து, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியது. இதனைத்தொடர்ந்து அதிதீவிரப்புயல், வலுவிழந்து புயலாக மாறி காற்றின் வேகம் குறைந்தது. அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதிப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலையோரம் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் இயல்பு நிலை திரும்பும் :
வர்தா புயல் பாதித்த பகுதிகளில் விரைவில் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை உன்னிப்புடன் கண்காணித்து வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் துணைத் தலைவர் பச்சநந்தா தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களிலும் சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ராணுவத்தினரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
English Summary : Varta storm struck with full force in the areas of rescue in wartime.Despite the storm struck varta Chennai, Tamil Nadu and 100 percent excluding the impact of the storm to the precautionary principle. Electric wires and street lights fallen trees and repairing the road works are underway in full swing.