சென்னை, வர்தா புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, இது தொடர்பாக உதவி தேவைப்பட்டால் மத்திய அரசு உடனடியாக உதவத்தயாராக உள்ளது என அவர், முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திடம் உறுதியளித்தார்.
வர்தா புயலால் பாதிப்பு
வர்தா புயல் நேற்று சென்னையை கடந்தது. இந்த புயல் கர்நாடக பகுதிக்குள் இன்று செல்லும் என்றும் புதன்கிழமையன்று கோவாவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்றால், மரங்கள் முறிந்து சாலைகளில்விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீட்டு கதவுகள் உடைந்தன. சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்
சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் போன்று ஏற்பட்டால் அதனை எதிர் கொள்வற்கான முன்னெற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தது. சென்னையில் வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசினார். அப்போது வர்தா புயலுக்கு பின்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நிலமை குறித்து கேட்டறிந்தார். தமிழக நிர்வாக எந்திரம் புயல் காரணமாக ஏற்படும் அனைத்து நிலைகளையும் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருந்தது என அப்போது முதல்வர் தெரிவித்தார்.
போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை(என்.டி.ஆர்.எப்.) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை (எஸ்.டி.ஆர்.எப்.) குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டன. மாநில எந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளின் போது பணியாற்றின என்ற விவரங்களையும் உள்துறை அமைச்சரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கினார். புயல் பாதிப்பு குறித்து ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மத்திய அரசு உடனடியாக உதவ தயாராக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வரிடம் அப்போது உறுதியளித்தார்.
English Summary : Varta storm: the federal government will make the necessary assistance to ensure that the Chief Minister Rajnath Singh told panneerselvam