சென்னை : தமிழகத்தில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட ஒரு குழுவை அனுப்பும்படி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், புயல் நிவாரண பணிக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1000 கோடியை உடனடியாக விடுவிக்குமாறும், பிரதமர் மோடியை முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடுமையான பாதிப்பு
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர ஒ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம் வருமாறு:-
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வடமாவட்டங்களில் கடுமையான வர்தா புயல் தாக்கியதை தாங்கள் அறிவீர்கள். இந்த புயலால் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக கடந்த 10-ம் தேதி அன்றே இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல்) பற்றியும், அது 12-ம் தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவித்திருந்தது. அந்த தகவல் கிடைக்கப்பெற்றதும், தமிழக அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்தது. மேலும், அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுக்களை நான் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தேசிய பேரிடர் நிவாரணப் படை, விமானப்படை, கப்பற்படை வீரர்களின் சேவையையும் நாங்கள் கேட்டிருந்தோம். நாங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களை அனுப்பி வைத்ததற்கு நன்றி.
புயலுக்கு முன்பே தாழ்வான பகுதிகளில் வசித்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 104 நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. வர்தா புயல் தமிழகத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது. புயல் கரையை கடந்த போது 130 முதல் 140 கி.மீ வேகத்தில் சூறைகாற்று வீசியது. சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
16 பேர் பலி
இந்த வர்தா புயலுக்கு இதுவரை 16 பேர் பலியாயுள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து, சென்னை நகரிலும், சுற்றப்புறத்திலும் போக்குவரத்தை முற்றிலும் பாதித்துவிட்டது. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளும் தீவிர பாதிப்புக்கு ஆளாகிவிட்டன. சென்னை அனைத்து பகுதிகளிலும் மின்சப்ளை துண்டிக்கப்பட்டு விட்டது. இதேநிலை தான், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. 800 டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துவிட்டன. எனவே மின்சார சப்பளையை மீண்டும் கொண்டு வருவது மிக, மிக அவசியம். போர்கால அடிப்படையில் அவற்றை செய்யவேண்டும்.
குடிசை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு பற்றி விரிவான ஆய்வு செய்யவேண்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை 2 அல்லது 3 நாளில் தயாரிகிவிடும். அது தயாரானதும், தமிழகத்தில் வர்தா புயலால் ஏற்பட்ட விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும். எனவே, வர்தா புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட ஒரு குழுவை இந்திய அரசு அனுப்ப வேண்டும்.
மேலும், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான், நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary : Varta storm to assess damage to the central committee of the National Disaster Relief Fund to release Rs 1,000 crore to the Prime Minister, Narendra Modi, Chief Minister O.Panneer Selvam letter.