
ஜி.எஸ்.டி. கவுன்சில்:
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை மேற்கொள்ளும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரும் நோக்கில் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஜி.எஸ்.டி. வரி விகிதம், இழப்பீடு கொள்கை உள்ளிட்ட அம்சங்களை இறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில்தான், மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரைவு மசோதாக்களையும் தயாரிக்கும். பின்னர் இந்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
இரட்டை கட்டுப்பாடு முறை:
இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் ஏற்கனவே 5 முறை கூடி பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்த நிலையில், நேற்று 6-வது முறையாக இந்த கவுன்சில் கூடியது. இதில் சர்ச்சைக்குரிய இரட்டை கட்டுப்பாடு முறை குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மிகப்பெரிய வரைவு மசோதாவில் உள்ள விதிகள் மற்றும் உட்கூறுகளை பற்றி விவாதிப்பதிலேயே நேற்றைய கூட்டம் நிறைவடைந்ததால் இது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.
இந்த கூட்டம் இன்றும் (திங்கட்கிழமை) நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், மீலாது நபியை முன்னிட்டு இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 1ல் அமல்:
ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த வரியை அமல்படுத்த மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்குப்பின் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில், 'வரைவு மசோதாவில் 195 பிரிவுகள் உள்ளன. இதில் 99 பகுதிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இதில் சில உட்பிரிவுகள் மறுவரைவுக்கு உட்படுத்த வேண்டும். அடுத்த கூட்டத்தில் சட்டப்பகுதி அனைத்தையும் இறுதி செய்ய முடியும் என நம்புகிறோம்' என்றார்.
ஜி.எஸ்.டி.க்கு குறித்த கால வரையறையை நிர்ணயிக்க வேண்டியது இல்லை என்று கூறிய அருண் ஜெட்லி, 2017 செப்டம்பர் 17-ந் தேதிக்குள் பழைய வரிமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
English summary:
Given the results achieved at the meeting in New Delhi yesterday GST When Arun Jaitley explained in regard to the coming into force