அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையிலும் மின்னணு பணப் பரிமாற்ற முறையை மேம்படுத்துவதற்காக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில முதல்வர்கள் இடம்பெறும் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்ததாவது:
மின்னணு பணப் பரிமாற்ற முறையை மேம்படுத்துவதற்காக சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய கொள்கைக் குழு (நிதி ஆயோக்) துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா, தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நீலேகனி, பாஸ்டன் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜனமேஜய சின்ஹா, நெட்கோர் சந்தையியல் நிறுவன மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் ஜெயின், ஐ-ஸ்பிரிட் மென்பொருள் நிறுவன இணை நிறுவனர் சரத் சர்மா, ஆமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் நிதித் துறை பேராசிரியர் ஜெயந்த் வர்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மின்னணு பணப் பரிமாற்ற முறையைத் தழுவிய பொருளாதாரத்தை அமல்படுத்துவதற்காக சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைக் கண்டறிந்து, அவற்றை இந்தியச் சூழலுக்கு ஏற்ப மாற்றுவது தொடர்பாக இந்தக் குழு பரிசீலிக்கும்.
மேலும், வங்கி அட்டைகள், மின்னணு பணப்பைகள் (இ-வாலட்), இணையவழி பணப் பட்டுவாடா உள்ளிட்ட மின்னணு பணப் பரிமாற்ற முறைகளை அதிக இடங்களில் விரிவுபடுத்துவதற்கு இந்தக் குழு திட்டமிடுவதோடு, அதை ஓராண்டுக்குள் அமல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் ஆராயும்.
மின்னணு பணப் பரிமாற்ற முறையைத் தழுவுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மின்னணு முறைக்கு மாற உதவி புரிவதற்காக செயல்திட்டம் கொண்டு வரப்படும். மின்னணு முறையிலான நிதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, மாநில அரசுகளின் நிர்வாகங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக திட்டம் வகுக்கப்படும்.
மேலும், மின்னணு பணப் பரிமாற்ற முறைக்கு மாறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இந்தக் குழு ஆலோசிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary : Electronic funds transfer system: the first group led by Chandrababu Naidu.Benefiting all parties, through electronic funds transfer system to improve transparency and to encourage, the Chief Ministers of Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu-led group has been set up by the Central Government.