சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல் நல குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருந்துகளால் ஏற்பட்ட உடல் ஒவ்வாமை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். மேலும் கருணாநிதி ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள், அவரை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு திமுக தலைமை கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் திடீரென இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு உடன் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கி இருப்பார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.