மும்பை: மும்பை டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, 3–0 என, தொடரை கைப்பற்றியது. இரு இன்னிங்சிலும் அஷ்வின் மொத்தம் 12 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2–0 என முன்னிலை வகித்தது.
நான்காவது டெஸ்ட், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400, இந்தியா 631 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து, 49 ரன்கள் பின்தங்கி இருந்தது. பேர்ஸ்டோவ் (50) அவுட்டாகாமல் இருந்தார்.
இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சில நிமிடத்தில் அஷ்வினின் ‘சுழலில்’ சிக்கி பேர்ஸ்டோவ் (51) அவுட்டாகினார். இவரது அடுத்த ஓவரில் வோக்ஸ் ‘டக்’ அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய அஷ்வின், அடுத்து வந்த ரஷித் (2), ஆண்டர்சன் (2) இருவரையும் அவுட்டாக்கினார்.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இரு இன்னிங்சிலும் சேர்த்து அஷ்வின் 12 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3–0 என, கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 16ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.