வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷியா உதவி உள்ளதாக சமீபத்தில் மத்திய உளவு முகமை சி.ஐ.ஏ. குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ரஷியா மறுத்தது. டிரம்ப் தரப்பிலும் மறுப்பு வெளியானது.
ஆனாலும் இதுபற்றி உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி ஜனவரி 20–ந் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனிப்பட்ட முறையில் தலையிட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினரின் இணையதளங்களில் சட்டவிரோதமாக நுழைந்து, எப்படியெல்லாம் தகவல்களை திருடி, கசிய விட வேண்டும் என்று புதின் தனிப்பட்ட முறையில் சிலருக்கு அறிவுரைகள் வழங்கியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன. இது தொடர்பான தகவல்களை ‘என்.பி.சி. நியூஸ்’ வெளியிட்டுள்ளது.
2011–ம் ஆண்டு ரஷியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலின் நேர்மை பற்றி அப்போதைய அமெரிக்க வெளியுறவு மந்திரியான ஹிலாரி கிளிண்டன் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து ரஷியாவில் போராட்டங்கள் நடந்தன. இந்த வகையில் ஹிலாரியை ஒருபோதும் மன்னிக்க முடியாது என புதின் கூறியது நினைவுகூரத்தக்கது.