முதல்வர் ஜெயலலிதா தனது பேச்சில் எப்போதும் பொன்மொழிகளையும், வெகுஜன மக்களைக் கவரும் கருத்துகளையும் குறிப்பிடுவது வழக்கம். பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அமுதமொழிகள்:
*ஏழை, எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடித்தளத்து மக்களுக்குக் கை கொடுத்து, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதில், நான் அளவற்ற அக்கறை கொண்டுள்ளேன்.
*தமிழ்நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு குடும்பமும், சமூக- பொருளாதார வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் முன்னேற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும்.
*ஆண்கள் பெண்கள் சரிநிகர் சமமாக உயர வேண்டுமானால், அவர்கள் பொருளாதார ரீதியில் அதிகாரம் பெற்று தங்களது சொந்தக் கால்களில் நிற்கும் வலிமையையும், தன்னம்பிக்கையையும் பெற வேண்டும்.
*குழந்தைப் பருவம் குதூகலமாய், வண்ணத்துப்பூச்சிகளாய் விளையாடித் துள்ளித் திரியும் காலம். பள்ளி சென்று பயில வேண்டிய காலம். குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்தி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும்.
* மிக அதிகமானவர்களுக்கு மிக அதிக நன்மையைப் பயப்பதுதான் உண்மையான மனசாட்சி.
*தொல் மொழிகளில் இன்று பேச்சு வழக்கில் இருந்து வருகிற ஒரு மொழி, நம் தமிழ் மொழியாகும். தமிழ் மொழியை நம் உயிரெனப் பேணிக் காத்து, எதிர்வரும் நூற்றாண்டுகளின் சவால்களை எதிர்கொள்கிற ஆற்றலையும் அறிவையும் அளிப்பதே, இன்றைய நமது கடையாகும்.
*கோயில்களுக்குச் சென்று வருவதையும், இறைவழிபாட்டில் ஈடுபட்டு வருவதையும், மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஆன்மிகப் பயிற்சியாக நமது முன்னோர்கள் கருதி வந்தார்கள்.
*ஆலயங்கள் சமுதாயத்தின் பொதுச் சொத்துகளாகவும், சமூக- பொருளாதார வேறுபாடுகளால் பிரிவுபடாமல் அனைவரும் சமம் என்ற உணர்வை வளர்க்கும் புனிதத் தலங்களாகவும் திகழ்ந்து வருகின்றன.
*நாட்டிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னுடைய கூர்நோக்கை மெய்யாக்குவதில் ஒவ்வோர் அரசுப் பணியாளரும், ஆசிரியரும் என்னோடு இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.
*ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தை முதன்மையான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற இலக்கை நான் கொண்டுள்ளேன்.
*மக்கள் நம் பக்கம் இருக்கிறார்களா என்பதைவிட மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதை எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. என்னை நம்புகிற மக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ அந்த வழிகளைப் பற்றியே நான் சதாசர்வ காலமும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். அதனால்தான், என் அன்பிற்குரிய மக்களாகிய நீங்கள் எப்போதும் என் பக்கம் இருக்கிறீர்கள்.
*கல்லாதவர்களே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதே எனது கோட்பாடாகவும், எனது அரசின் குறிக்கோளாகவும் அமைந்துள்ளது.
*தமிழக மக்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தடையாக நிற்கும் எந்த இடையூறுகளையும் பொடிப் பொடியாக்கும் உறுதிப்பாடு எனது உள்ளத்தில் எப்போதும் உண்டு.
*தேவையை நிறைவேற்றுவதே எனது நோக்கம். அதைச் சாதிப்பதே என் செயலாகும். அந்த வழிக்கு வாருங்கள். இந்தக் கடின வேலையை எளிதாக, விரைவாகச் செல்வதற்கு தகவல் தொழில்நுட்பம் அவசியத் தேவையாகும்.
*எதிலும் ஆக்கப்பூர்வமான சிந்தை ஒன்றே தாரக மந்திரமாக இருக்க வேண்டும். எதையும் பெரிதாக எண்ணுங்கள். எடுக்கும் முடிவில் திடமாக இருங்கள்.
*என் எண்ணங்கள் மக்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. என்னுடைய செயல்பாடுகள் மக்களை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன.
*உங்கள் (மக்கள்) அன்பும், உங்கள் பாசமும் ஒரு கோடித் தடைகளை உடைத்தெறிகிற வல்லமையை எனக்குத் தருகின்றன. சக்தி என்பது மக்கள் சக்திதானே. மின் சக்தி என்றாலும், காந்த சக்தி என்றாலும், சக்தி என்றாலும் அவை எல்லாம் மக்கள் சக்திக்கு அப்புறம்தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
*ஏழைகள் எழைகளாகவே இருந்துவிடக் கூடாது. அவர்களது நிலை உயர வேண்டும். அதற்காகவே அல்லும் பகலும் நான் உழைத்து வருகிறேன்.
*உழைப்புக்கு என்றும் உயர்வு உண்டு. பிறர் உழைப்பில் கிடைக்கும் பொருளை அனுபவிப்பதில் உள்ள இன்பத்தைவிடச் சொந்த உழைப்பின் உயர்வில்தான் உண்மையான மனநிறைவு கிடைக்கும் என்பதை உணர்ந்து, நம்பிக்கையோடு கடமைகளை நிறைவேற்றுங்கள். வெற்றி உங்களுக்கு.
*தன் மீது நம்பிக்கை இல்லாத மனிதர்களுக்கு எவர் மீதும் நம்பிக்கை இருக்காது. இதுதான் உளவியல் உண்மை. தன்னை
நம்பும் மனிதர்கள்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
*எப்போதுமே ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். சிந்தித்து நம்பிக்கையோடு இருந்தால் தீமையிலும் நன்மை விளையும், சோதனைகளைக் கடந்து எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வெற்றி கொள்ள முடியும்.
*எதையும் முழுமையான ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி நிச்சயம். அதை, ஒரு சமூக அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் அதுதான் தேச சேவை.
*பெண்கள் நினைத்தால் தங்கள் தலை எழுத்தை மட்டுமல்ல, மற்றவர்களின் தலை எழுத்தையும் மாற்ற முடியும். அவர்களுக்குத் தேவை வாய்ப்புகள். அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே எனது லட்சியம்.
*உழைப்புக்கு மரியாதை தருகிற மனப்பான்மை நம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். சோம்பல் என்பது வீட்டுக்கு மட்டுமல்ல. நாட்டுக்கும் கேடு.
*நம் நாட்டு மக்களுக்கு என்ன குறை. அறிவில் குறையா, இல்லை ஆற்றலில் குறையா? இல்லவே இல்லை... அப்புறம் என்ன குறை. ஊக்கம் இல்லை என்பது குறை, உழைப்பு போதாது என்பது குறை.
*வளர்கிற நாடுகளில் மட்டுமல்ல. வளர்ந்த நாடுகளிலும் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உழைப்புக்கு மரியாதை கொடுக்கிறது அந்தச் சமுதாயம். அங்கே பணக்காரர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். தொழில் அதிபர்களும் நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள்.
*இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கிய பயணத்தில் நாம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம்.
*மனித உறவுகளை மேம்படுத்துவதில் நன்றி மனப்பான்மை மிகவும் முக்கியமானது.