புதுடெல்லி - பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் ஒரு மாதமாக எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் எதிர் கட்சிகள் அமளியால் முடங்கி வருகிறது. கடந்த 30 நாட்களாக நடந்து வரும் இந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில் ஓய்வு பெறலாமா? என்ற எண்ணம் ஏற்படுகிறது என பா.ஜ.கவின் மூத்த தலைவரும் லோக் சபா எம்.பி அத்வானி வேதனையுடன் தெரிவித்தார். பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதியன்று துவங்கியது. இந்த கூட்டத்தொடர் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக அதாவது நவம்பர் 8ம் தேதியன்று பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் உள்ள கறுப்புப்பணம் , வரி ஏய்ப்பு, ஊழல் , தீவிரவாதத்திற்கு நிதி உதவி செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் ஒடுக்க இந்த நடவடிக்கை யைஎடுப்பதாக மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில் சாதாரண ,ஏழை மக்கள் அரசின் முடிவால் பரிதவித்து உள்ளனர். வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை நாள் முழுவதும் வெயிலில் நின்ற மக்களில் ஏறக்குறைய 100 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு அறிவிப்பு ஆலோசனை இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு. அதனை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இதனால் இந்த கூட்டத்தொடர் கடந்த ஒரு மாதமாகவே எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் முடங்கி வருகின்றன. பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்பது குறித்த விவாதத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வர வேண்டும் என எதிர் கட்சிகள் கோரியபோது,பிரதமர் மோடி இரு அவைக்கும் வந்தார். ஆனால் எதிர் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளி) முடிவடைகிறது. இந்த கூட்டத்தொடரின் நிறைவு நாளுக்கு முந்தைய நாளான நேற்றும் பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கோஷம், சத்தத்தால் பாராளுமன்றம் முடங்கியது.
இது குறித்து மூத்த எம்.பியும், பா.ஜ.க தலைவருமான அத்வானி லோக்சபாவில் தனது அருகில் இருந்த அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கூறுகையில், இந்த கூட்டத்தொடர் எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் முடிவடைவதை எண்ணும் போது ஓய்வு பெறலாமா? என்று தோன்றுகிறது என வேதனையுடன் குறிப்பிட்டார். தனது ராஜினா பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடமும் அத்வானி வேதனையுடன் குறிப்பிட்டார். அதற்கு ராஜ் நாத் சிங் அவருக்கு ஆறுதல் கூறி ஓய்வு முடிவு குறித்து யோசிக்காதீர்கள் உங்கள் பணி தேவை என்று தெரிவித்தார்.ராஜ்ய சபாவில் நேற்று நில கையக மசோதா தொடர்பான நிலைக்குழுவின் அறிக்கை தள்ளிவைப்பு குறித்த நோட்டீஸ் படிக்கப்பட்டது.
லோக்சபாவில் கேள்வி நேரம் தொடங்கியதும் மதியம் வரை அவை எதிர் கட்சிகள் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. இதேப்போன்று ராஜ்ய சபாவிலும் எதிர் கட்சியினர் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அவையை நடத்த விடாமல் செய்தனர். ஆளும் கட்சியினரும் கையில் விளம்பர போர்டுடன் நின்றார்கள். இந்த நிலையில் அவை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.லேக்சபாவில், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தி குறித்து ஒரு அமைச்சர் கேள்வி எழுப்பினார்.அப்போது இந்த ஊழல் விவகாரத்தால் காங்கிரஸ் விவாதம் நடத்தாமல் ஓடி ஒளிகிறது என்றும் அமைச்சர் விமர்சித்தார்.அப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசினை விமர்சித்து கோஷம் எழுப்பின. இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாமல் லோக் சபா இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.