சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதி சளித் தொல்லை காரணமாக நேற்று இரவு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வாமை பாதிப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 1–ந் தேதி உடல் நலக்குறைவால் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வயது மூப்பு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்டு வந்த மருந்துகளால் ஏற்பட்ட ஒவ்வாமையால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒரு வார சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த 7–ந் தேதி வீடு திரும்பினார். அப்போது, மருத்துவமனை நிர்வாகம் சார்பில், கருணாநிதியின் உடல் உள்ளுறுப்புகள் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர் வீடு திரும்பிய பிறகும், வீட்டில் வைத்தும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
சளித் தொல்லை
இந்தநிலையில், நேற்று மாலையில் அவருக்கு சளித் தொல்லை அதிகரித்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு 11.10 மணி அளவில் மீண்டும் மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி எம்.பி., செல்வி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் நேற்று இரவு அவருடன் மருத்துவமனைக்கு வந்தனர்.