புது டெல்லி : மார்க்கண்டேய கட்ஜூவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
பலத்த எதிர்ப்பு
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில், காந்தி ஒரு பிரிட்டிஷ் கைக்கூலி, பிரிட்டிஷாருடன் சேர்ந்து இந்தியாவைப் பிளவுபடுத்தினார் என்பன போன்ற கருத்துகளை எழுதியிருந்தார். மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானிய கைக்கூலி எனவும் கூறியிருந்தார். கட்ஜூவின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.
கண்டனத் தீர்மானம்
இதனைத் தொடர்ந்து கட்ஜூவுக்கு எதிராக கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 10 மற்றும் 11-ம் தேதிகளில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து மார்க்கண்டேய கட்ஜூ சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
மனு தள்ளுபடி
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் "மார்க்கண்டேய கட்ஜூவுக்கு எதிராக மக்களவை, மாநிலங்களவையில் இயற்றிய கண்டன தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது" என அதிரடியாக தீர்ப்பு வழங்கி கட்ஜூவின் மனுவைத் தள்ளுபடி செய்தது.