சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், கட்சியை சிறப்பாக வழிநடத்துமாறு அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சர் வேண்டுகோள்
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என அமைச்சர் கே.சி. வீரமணி உள்ளிட்டோர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக உடனிருந்து, அரசியல் நெளிவுசுளிவுகளை நன்கு அறிந்து வைத்துள்ள சசிகலாவால் மட்டுமே ராணுவ கட்டுப்பாட்டுடன் கழகத்தை நடத்த முடியும் என்பதால், கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பினை அவர் ஏற்று, அதிமுகவை வழிநடத்த வேண்டும் என சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம்
தமிழகத்தையும், கழகத்தையும் வழிநடத்திச் செல்லும் வல்லமையும், ஆளுமையும் சசிகலா ஒருவருக்கு மட்டுமே உள்ளது என திண்டுக்கல் மாவட்ட பொதுமக்களும், கழக நிர்வாகிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
குமரி மாவட்டம்
தமிழக மக்களின் நலனுக்காக தவவாழ்க்கை வாழ்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்றப் பணிகளை, அவருக்கு உறுதுணையாக இருந்த சசிகலா தொடர வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், கழகத்தைக் கட்டிக்காக்க சசிகலா பொதுச் செயலாளர் பதவி ஏற்க வேண்டி, மதுரை புறநகர் மாவட்டம் சார்பில், கழகத்தினர், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அண்ணா தொழிற்சங்கப் பேரவை தீர்மானம்
கழகப் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை சசிகலா உடனே தொடர வேண்டும் என்றும், திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டல அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.