சென்னை : இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் சர் டொமினிக் அஸ்குவித் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
மறைந்த முதல்வருக்கு புகழாரம்
இந்தியாவுக்கு பிரிட்டிஷ் தூதர் சர் டொமினிக் அஸ்குவித் நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அவரை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றார். ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள சோகமான தருணத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக முதல்வர் குறிப்பிட்டார். ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்ட பிரிட்டிஷ் தூதர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிக உயர்ந்த அரசியல் தலைவர் என்றும், செயலாற்றல் திறன் கொண்ட ஒரு தலைவரை இந்தியா இழந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
தமிழக அரசுக்கு பாராட்டு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளும், குறிக்கோள்களும் நிறைவேறும் வகையில் அவருடைய பாதையில் நடைபோட தமிழக அரசு உறுதி பூண்டுள்ளதாக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முதலீட்டாளர்களை தமிழ்நாடு வரவேற்பதாக குறிப்பிட்ட முதல்வர், ஆட்டோ மொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக தெரிவித்தார். புயலால் ஏற்பட்ட சீரழிவிலிருந்து தமிழகம் இயல்புநிலைக்கு விரைந்து திரும்ப தமிழக அரசும், பிற அமைப்புகளும் மேற்கொண்ட பணியை பிரிட்டிஷ் தூதர் பாராட்டினார். இந்த சந்திப்பின்போது, சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் பரத் ஜோஷி, தலைமைச் செயலாளர் முனைவர் ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.