சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி தொடருமா? என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அலைஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா 3 டெஸ்டில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது.
விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்ட் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (16-ந்தேதி) தொடங்குகிறது.
இந்திய அணி சென்னை டெஸ்டிலும் வென்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இருப்பதால் அணியின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக 17 டெஸ்டில் தோற்காத இந்திய அணி அதை தொடர்ந்து தக்க வைத்து 18 டெஸ்டாக்க முயற்சிக்கும். ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 4-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
மும்பை டெஸ்டில் விளையாடிய அணியே சென்னை போட்டியிலும் விளையாடும் அணியில் எந்த மாற்றமும் செய்ய கோலி விரும்பமாட்டார் என்று தெரிகிறது.
பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். இந்த ஆண்டில் அவர் மூன்று இரட்டை சதம் அடித்துள்ளார். 4 டெஸ்டில் 640 ரன்கள் குவித்து உள்ளார். இதில் இரண்டு சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும்.
இதுதவிர புஜாரா, முரளி விஜய் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். இந்த தொடரில் புஜாரா 2 சதத்துடன் 385 ரன்னும், முரளி விஜய் 2 சதத்துடன் 328 ரன்னும் எடுத்துள்ளனர்.
அஸ்வின் ஆல்ரவுண்டர் வரிசையில் இருக்கிறார். 3 அரை சதத்துடன் 239 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 27 விக்கெட் சாய்த்து உள்ளார். 3 முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.
இதேபோல் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளார். அவர் 16 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
இந்திய அணியின் பலமே சுழற் பந்துவீச்சு தான் அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் கூட்டணி சென்னை டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் குக் (310 ரன்), ஜோ ரூட் (397 ரன்), பென் ஸ்டோக்ஸ் (316 ரன்), பேர்ஸ்டோவ் (302 ரன்), போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், அதில் ரஷீத் (22 விக்கெட்), மொயின் அலி (9 விக்கெட்) போன்ற சிறந்த சுழற்பந்து வீரர்களும் உள்ளனர்.
காயம் காரணமாக கடந்த 2 டெஸ்டில் விளையாடாத ஸ்டூவர்ட் பிராட் அணிக்கு திரும்புகிறார். இந்த டெஸ்டிலாவது வென்று ஆறுதல் பெற முடியுமா? என்ற ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.
ஜெயலலிதா மறைவு, வார்தா புயல் காரணமாக சென்னையில் டெஸ்ட் போட்டி நடக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தற்போது திட்டமிட்டப்படி சென்னையில் டெஸ்ட் போட்டி நடக்கிறது.
வார்தா புயலால் ஸ்டேடியத்தின் இருக்கைகள், கோபுரத்தின் மேல் உள்ள மின் விளக்குகள், சைடு ஸ்கிரீன், குளிர்சாதன வசதி ஆகியவை சேதமடைந்தன. அனைத்து வசதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
ஆடுகளம் புயலால் பாதிக்கப்படவில்லை. மழையால் ஈரப்பதம் இருந்தது. நிலக்கரி தணலால் உலர வைக்கும் பணி நடந்தது. ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்று இதுவரை கணிக்கபடவில்லை.
இன்று டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்சில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.