நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையே இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்க வேண்டுமெனில், ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஆனால், இதுகுறித்து மக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வு இல்லை. எனினும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு, இணைய வழியில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இணையவழி பணப் பரிவர்த்தனை குறித்து நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, வரும் 12-ஆம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்துக்கு, பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இணைய வழி பணப் பரிவர்த்தனையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படும்.
இதற்கு நிதி சார் அறிவு விழிப்புணர்வு திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், இந்த முறை குறித்து குறைந்தபட்சம் 10 பேருக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
இந்தத் திட்டத்தை முன்னிட்டு, சுமார் 670 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடனும், உயர்கல்வித் துறை தொடர்புடைய அதிகாரிகளுடனும் வியாழக்கிழமை காணொலி முறையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. வெறும் 2 மணிநேரத்துக்குள் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
English Summary : Money transfer via Internet Awareness: Federal Government Program