சென்னை: காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி தமிழக மக்களையும், உலகத்தமிழர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி கொடும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த 3 மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் அவர்கள் உடல்நலம் தேறிவருகிறார் என்று நாமெல்லாம் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தவேளையில் இதயச் செயலிழப்புக் காரணமாக இயற்கை எய்தினார் என்று வெளிவந்திருக்கின்ற செய்தி நம்மை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் உள்ளவுறுதியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறை, அரசியல் எனத் தான் ஏற்றுக்கொண்ட இருதுறைகளிலும் சிகரம்தொட்டு கோலோச்சியவர். தான் எடுக்கின்ற முடிவுகளில் பின்வாங்காது இறுதிவரை உறுதியாய் நின்று அதில் சாதித்துக்காட்டும் ஆளுமையும், பாங்கும் அவருக்கே உரித்தானதாகும். சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அவர் தனது அறிவாற்றலின்மூலமும், கடின உழைப்பின் மூலமும் வாழ்வின் உச்சத்தைப் பெற்றார். ஒரு நடிகையாகத் தன் வாழ்வினைத் தொடங்கி நாடறிந்த தலைவராக உயர்ந்த அவரது வாழ்க்கையானது ஒரு சகாப்தமாகும்.
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கி கோடானகோடி மக்களின் இதயங்களைக் கவர்ந்து மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த அவர், பல்வேறு விதமான திறமைகளைக் கொண்டவராகவும் திகழ்ந்தார். ஏறக்குறைய 7 மொழிகளைத் தங்கு தடையின்றி எழுத, பேச ஆற்றல் பெற்றவராகவும், தேர்ந்த புத்தக வாசிப்பாளராகவும் திகழ்ந்தது அவரது பன்முகத் திறமைக்குச் சான்றாகும். பல சோதனைகளைத் தாங்கி, பல நெருப்பாறுகளைத் தாண்டிய அவரது வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்கள் கொண்டது. எத்தனை சோதனை வந்தாலும் தன் மன உறுதியால் சோதனைகளைத் சாதனையாக மாற்றிக்கொண்ட திறமை அவருக்கே உரியது.
மறைந்த 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவரது மறைவிற்குப் பின்னால் குழப்பங்களாலும், சரிவுகளாலும் வீழ்ச்சியைக் கண்டிருந்த அ.தி.மு.க எனும் மாபெரும் அரசியல் கட்சியைத் தனது அளப்பரிய மனத்திடத்தால் காப்பாற்றி மீட்டெடுத்து தமிழக அரசியல் வரலாற்றில் அ.தி.மு.க.வை வெற்றிமேல் வெற்றி காணும் மகத்தான அமைப்பாக மாற்றிய வல்லமை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கே உரித்தானது.
2009ஆம் ஆண்டு ஈழத்தில் நம் தாய்த்தமிழ் உறவுகள் சிங்களப் பேரினவாத கரங்களுக்குச் சிக்குண்டு இனப்படுகொலைக்கு ஆட்பட்டதைத் தீவிரமாக எதிர்த்து 2011-ஆம் ஆண்டுத் தமிழகச் சட்டமன்றத்தில் அக்கோர நிகழ்வை 'இனப் படுகொலை' எனவும், தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உலகத் தமிழர்களின் உள்ளத்தில் பேரன்பிற்கும், மதிப்பிற்குரிய இடத்தைப் பிடித்தார். அதற்கு நன்றி தெரிவித்து எமது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நான் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தபோது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களிடம் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து நீண்ட நேரம் பேசியதாகக் கூறினார்.
மேலும். 'தனித்தமிழீழத்தை அடைய இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை மாற்ற வேண்டும். அதனால், வெளியுறவுக்கொள்கையை மாற்றப் பாடுபடுவோம்' எனக் கூறி, ஈழ விடுதலை குறித்த அவரது தெளிவானப் பார்வையை உணர்த்தினார்.
இத்தோடு, கடந்த 2014ஆம் ஆண்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கிறபோது அவரிடம் அளித்த மனுவில், இலங்கை அரசு இனப்படுகொலை செய்த நாடு எனக் குறிப்பிட்டும், இலங்கை இராணுவத்திற்குத் தமிழகத்திற்குப் பயிற்சியளிக்க அனுமதிக்க மாட்டோம் எனப் பொட்டில் அடித்தாற்போல அறிவித்தும் தனது சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உலகறியச் செய்தார்.
முன்னாள் பாரதப் பிரதமர் இராசீவ் காந்தி கொலைவழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிக்கித்தவிக்கும் ஏழு அப்பாவித் தமிழர்களை மீட்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, நீதிமன்றங்களிலும் இறுதிவரை போராடிக்கொண்டிருந்த அவரது பணிகள் போற்றுதலுக்குரியது.
தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கும் மீத்தேன் எரிகாற்று திட்டத்தையும், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தையும் தடுத்து நிறுத்தியதில் தமிழக முதல்வரின் பங்கு மறுக்க முடியாது. மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், கச்சத்தீவை மீட்கக்கோரியும் நடத்திய சட்டப்போராட்டங்களிலும் அவரது பங்கு அளப்பரியது. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்காகத் தீவிரமாகப் போராடியதும், உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 விழுக்காட்டைக் கொண்டு வந்ததும் அவரது அரசியல் வாழ்வின் மணிமகுடங்களாகும்.
ஒரு சாதனைப் பெண்மணியாக, இரும்பு மனுசியாக, மனத்திடம் நிரம்பிய ஆற்றலாளராகத் திறன்வாய்ந்த முடிவுகளை உடனுக்குடன் எடுக்கின்ற ஒரு அரசியல் தலைமையாக, தேர்ந்த அறிவாற்றல் கொண்ட ஆளுமையாக எனப் பல்வேறு விதமான புகழ்வாய்ந்த பரிணாமங்களைக் கொண்டது அவரது வாழ்க்கை.
பெண்ணடிமைப் பேசுகிற ஒரு சமூகத்தில் தோன்றி உற்றார், உறவினர், சாதியப் பலம் இவைகளெல்லாம் எதுவுமில்லாது தன் மன உறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்க்கை காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இழந்துவாடும் தமிழக மக்களின் துயரிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களின் வேதனையிலும் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.
மறைந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு உளப்பூர்வமான இறுதி வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
-இவ்வாறு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
English summary:
Naam Tamilar Chief Seeman has conveyed his hearty condolences for the demise of CM Jayalalithaa.