‛ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்திய சட்டப்படிதான் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என பீட்டா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோசிபுரா தெரிவித்துள்ளார்.
பீட்டா தலைவர் பூர்வா ஜோஷிபுரா
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், சேவாக், முகமது கைஃப், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் போன்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ‛ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றால் குத்துச்சண்டை போட்டிக்கும் தடை விதிப்பதுதான் நியாயமானதாக இருக்கும்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
‛டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது. அதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் தங்கையும், விலங்குகள் நல ஆர்வலருமான அம்பிகா சுக்லாவும் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது, அம்பிகா சுக்லாவை நோக்கி, 'முரட்டுக்காளை' படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலைப் பாடி கலாய்த்து எடுத்து விட்டார் ஸ்ரீகாந்த். அம்பிகா சுக்லாலோ தொடர்ந்து எதையோ ஒப்புக்கு பேசி சமாளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில்' தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க, தமிழ் கலாச்சாரம் வாழ்க' என ஸ்ரீகாந்த் பேசி முடித்தார். அம்பிகா சுக்லா வாயை மூடிக் கொண்டார்.
எப்போதும் அமைதியாகவே இருக்கும் தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டு நாடே வியக்கிறது. சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும், சேலத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
இதற்கிடையே பீட்டா இந்தியா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோசிபுரா ஆங்கில இணையதளத்துக்கு ஒரு பேட்டியளித்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, ''ஜல்லிக்கட்டுத் தடைக்கு நாங்கள் காரணம் இல்லை. எங்களைப் போலவே பல அமைப்புகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. அதில் நாங்களும் ஒன்று. இந்திய சட்டப்படித்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உரிமையை, பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். தமிழகத்தில் 144 விவசாயிகள் இறந்து போனார்களே... அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள். நாட்டுக் காளைகளை காக்க பல்வேறு வழிகள் உள்ளன.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படும் நாட்டு மாடுகளை காக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்களது அந்த முயற்சிக்கு நீங்களும் உதவ முன்வாருங்கள். அவைகளும் நாட்டு மாடுகள்தானே. இறைச்சிக்காகவும், தோல் போன்றத் தேவைகளுக்காகவும் அவைகள் கொல்லப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும் போது ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதால் நாட்டு மாடுகள் அழிவது குறைவுதான்.
இந்தியாவின் பிற மாநிலங்கள் நாட்டு மாடுகளை காப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்து ஆதாயங்கள் பெறுகின்றன. நமது அரசியல் அமைப்பு சட்டம், ஒவ்வொரு இந்திய குடிமகனும் விலங்குகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறது. சட்டத்தை மதிப்பது நமது கடமை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தமிழ் கலாசாரம் உயர்ந்தது. இதற்கு மேல் எதுவும் கூறத் தேவையில்லை'' என தெரிவித்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் கெடு விதித்திருந்தனர். தற்போது கெடு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் சங்கமும் நாளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. போராட்டக் களமும் சூடுபிடித்துள்ளது.