நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. ஒருங்கிணைந்த பட்ஜெட் (பொது பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட்) புதன்கிழமை (பிப்.1) தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும்.
பின்னர், மார்ச் மாதம் 9-ஆம் தேதி 2-ஆவது அமர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.
நிகழ் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்துகிறார். கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ளார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருந்த ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை நிகழ் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொது பட்ஜெட்டுடன் சேர்ந்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது நாளான புதன்கிழமை ஒருங்கிணைந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவிருக்கிறார்.
சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டத்தை (ஜிஎஸ்டி) ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தச் சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அட்டவணையை பட்ஜெட்டில் ஜேட்லி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு பிரிவினருக்கு வரிச் சலுகைகளையும், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் துறை, உற்பத்தி துறைகள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களையும் பட்ஜெட்டில் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையை பொருத்தமட்டில், அதிவேக ரயில் தொடர்பான அறிவிப்புகளும், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெறும் எனத் தெரிகிறது. ரயில்வே கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுமா? என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து தில்லியில் திங்கள்கிழமை 2 அனைத்து கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தில்லியில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற முதல் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் தலைமை வகித்தார்.
மாலையில் நடைபெற்ற 2-ஆவது கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
எனினும், உயர்மதிப்பு ரூபாய் நோட்டு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பலாம் எனத் தெரிகிறது.
குறிப்பாக, நிதி நிறுவன மோசடி வழக்குகளில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தை அக்கட்சியின் உறுப்பினர்கள் பிரச்னையாக்கலாம் என்று கூறப்படுகிறது.