எதிர்பாராத விபத்தாக முதல்வர் பதவியை மூன்றாவது முறையாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிர்வாக ரீதியாக முடிவுகள் எடுக்கத் தெரியாதவர் என்ற விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.
ஜெயலலிதாதான் முடிவு எடுத்தார்
2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் நிதித்துறை பொறுப்பை ஓ.பன்னீர் செல்வம் கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் கே.வி ராமலிங்கத்திடம் இருந்த பொதுப்பணித்துறையும் ஓ.பன்னீர் செல்வத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, நிதி அமைச்சர் என்றாலும் பொதுப்பணித்துறை அமைச்சர் என்றாலும், வேறு ஒரு துறையின் அமைச்சரே என்றாலும் கூட அவர் வெறும் நிழலாகத்தான் இருக்க முடியும். அனைத்து துறைகளில் கொள்கை முடிவுகள், அவசர முடிவுகள், அவசரம் இல்லாத முடிவுகள் அனைத்தையும் அதிகாரிகள் வழியே முதல்வர்தான் எடுத்து வந்தார்.
செம்பரம்பாக்கம் சர்ச்சை
பொதுப்பணித்துறையில் நடைபெற்று வந்த மணற்கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட எந்த விஷயங்களையும் பன்னீர் கண்டு கொள்ளவில்லை. முதல்வர் ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுப்பதை மட்டுமே அவர் நோக்கமாக கொண்டு இருந்தார். மாநிலத்துக்குள் துறை ரீதியாக எந்த ஒரு சிக்கலும் வராத வகையில், அந்த குறிப்பிட்ட துறையின் அமைச்சரும் பிரச்னைகளில் சிக்க வாய்ப்பில்லைதான். 2015ம் ஆண்டு பெரும் மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிய போது அதனை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த சிக்கல் எழுந்தபோது பொதுப்பணிதுறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
அதிகாரிகளை அழைத்துப் பேசி முந்தைய காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிய போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுத்திருந்தால், சென்னை மூழ்கி இருக்காது. முதல்வரே முடிவு எடுக்கட்டும் என்று ஒதுங்கி விட்டார் பன்னீர். பெரும் மழை முடிவடைந்த பின்னர், நீர் நிலைகள் பராமரிப்பு குறித்து கேள்வி எழுந்தபோது, அது குறித்தும் கூட பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் எந்த ஒரு கொள்கை முடிவையும் பன்னீர் செல்வம் அறிவிக்கவில்லை. சட்டசபையில் கூட எந்த ஒரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
இப்போது குறுக்கே நிற்பது யார்?
முதல்வர் ஜெயலலிதா, என்ற ஒற்றை உத்தரவுக்காக காத்திருந்ததால், பன்னீர் மட்டுமல்ல அமைச்சர்கள் எல்லோருமே எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாமல்தான் இருந்தனர் என்று சொல்கின்றனர். ஆனால், இப்போது யார் குறுக்கே நிற்கிறார்கள். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர் செல்வம் வர்தா புயல் பாதிப்புகளின் போது துரித கதியில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்தார். ஆனால்,அந்த சுறுசுறுப்பு இப்போது எங்கே போனது? ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். பதிலுக்கு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று அறிக்கை மட்டுமே விட்டதோடு நிறுத்திக் கொண்டார் ஓ.பி.எஸ். அவசரச் சட்டம் கொண்டு வருவது பற்றியோ, மத்திய அரசிடம் பேசுவது பற்றியோ சிந்திக்கவில்லை. பொங்கல் விடுமுறைக்காக தேனி சென்றவர், சொந்த ஊரில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வந்தார். இளைஞர்கள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர்தான், அவசர சட்டம் வேண்டும் என்று அவர்கள் கேட்டபிறகுதான் ஓ.பி.எஸ் டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லியில் மோடி, நீங்களே சட்டம் இயற்றுங்கள் என்று சொன்னார். இதன் பின்னர்தான் மாநில அரசே சட்டம் இயற்றும் என்று கூறினார்.
மெரினா போராட்டம்
ஒரு முதலமைச்சராக பொங்கல் பண்டிகைக்கு முன்பே சட்ட அமைச்சர், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து அவசர சட்டம் குறித்து முடிவு எடுத்திருக்கலாம். முன்புதான் முதல்வர் ஜெயல லிதாவின் கண் அசைவுக்குக்காக ஓ.பி.எஸ் காத்திருந்தார். இப்போது அவரை யார் தடுத்தது?
மெரினாவில் இளைஞர்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டபோது சில சமூகவிரோத சக்திகள் ஊடுருவி இருப்பதால் அவர்களைக் கலைந்து போகச் சொல்லும்படி போலீஸார் சொன்னதாக சட்டப்பேரவையில் முதல்வர் சொல்கிறார். ஆனால், சமூகவிரோதிகள் ஊடுருவியதாகத் தகவல் இல்லை என்று தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகிறார். இதில் இருந்தே முதல்வரின் கட்டுப்பாட்டில் போலீஸ் துறை இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸ் உயர் அதிகாரிகள் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என்று உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் உத்தரவிட்ட தவறிவிட்டாரா? நிர்வாக ரீதியாக இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓ.பி.எஸ் அவர்களே நிர்வாகத்தில் விரைவாக துணிச்சலான முடிவுகளை எடுங்கள்.