இணைய சேவைகளில் கூகுளின் பெரிய பலம் சர்ச் இன்ஜின். அதற்கு செக் வைக்கும் விதமாக புதிதாக ஒரு விஷயத்தை ஆரம்பித்துள்ளது ஃபேஸ்புக். இணையதள சேவைகள் அனைத்தையும் தனது ப்ளாட்ஃபார்மிலே கொண்டு வரும் முயற்சியாக இதனை செய்துள்ளது ஃபேஸ்புக்.
சமூக வலைத்தளம், போட்டோக்களுக்கு இன்ஸ்டாகிராம், யூ-ட்யூபிற்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோக்கள் மற்றும் லைவ். விளம்பரதாரர்களுக்கு ஆட்ஸ், அலுவலகங்களுக்கு வொர்க் ப்ளேஸ், உடனடி ஆப்ஸ்களோடு போட்டி போட வாட்ஸ் அப் என எல்லாவற்றிலும் கூகுளுக்கு சரிக்கு சமமாக எதிர்க்கும் ஃபேஸ்புக்கிற்கு எட்டாக்கனியாக இருந்தது சர்ச் இன்ஜின்தான். தற்போது அதிலும் களமிறங்கவும் முடிவு செய்துள்ளது .
மெட்டா எனும் சர்ச் இன்ஜினை ஆராய்ச்சி பணிகளுக்காக மார்க் சக்கர்பெர்க், சான்-சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் மூலமாக வாங்கியுள்ளார். இது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவும் என்றும், இணையத்தில் இருக்கும் யாராலும் கண்டு கொள்ளப்படாத, அதேசமயம் தேடல் தொடர்பான தரவுகளை ரியல் டைமில் தரும் சர்ச் இன்ஜின் என்றும் கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக் தற்போது இந்த தேடுதல் தளத்தை ஆராய்ச்சி பணிகளுக்காக மட்டுமே வாங்கியுள்ளது. சான் சக்கர்பெர்க் இனிஷியேட்டிவை ஒரு லாப நோக்கமில்லா அமைப்பு என்பதிலிருந்து விலக்கி ஒரு சில பொறுப்புகளை கொண்ட அமைப்பாக அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறது. அதனால் தான் மெட்டா போன்ற நிறுவனங்களை சான் சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் மூலம் வாங்கி வருகிறது. 45 பில்லியன் மதிப்புள்ள சான் சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் இந்த மெட்டா தளத்தை எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை. சான் சக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் மூலம் ஏற்கெனவே 3 பில்லியன் ரூபாயை மருத்துவ மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக மார்க் வழங்கியுள்ளார்.
பிற்காலத்தில் தனது மந்திர வார்த்தையான ''கனெக்ட்'' என்ற விஷயத்தில் ஃபேஸ்புக் இந்த தேடுதல் தளத்தையும் மக்கள் சேவைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்யும் பட்சத்தில் கூகுளுக்கு மிகச் சரியான போட்டியாக ஃபேஸ்புக் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் ஃபேஸ்புக் தன்னை தனி ஒருவனாக டெக் உலகில் நிலைநிறுத்த விரும்புகிறது. ஃபேக் செய்திகளுக்காக முதல் குரல் எழுப்பியது ஃபேஸ்புக் தான். இவையெல்லாம் நடந்தால் பிற்காலத்தில் எதாவது தெரிய வேண்டுமா? கூகுள் செய்து பார் என்பது மாறி ஃபேஸ்புக் போய் பாருங்கள் விடை கிடைக்கும் என்ற நிலை வந்தாலும் வரும். எல்லாம் மார்க் செய்யும் மாயம்...!