தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் உலகத்தமிழர்கள் மத்தியிலும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் ஒரு பகுதியாக இலங்கை யாழ்ப்பாணத்தில்,தமிழக ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாகவும் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் முருகன் ஆலய முன்றலில் இன்று (புதன்கிழமை) மாலை இளைஞர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தன்னெழுச்சியாக ஒன்றுகூடிய இளைஞர்கள் எவ்வித குழப்பங்களுக்கும் இடம்கொடுக்காமல் அமைதியான முறையில் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரியம், பீட்டாவை தடை செய் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "அலங்கா 'நல்லூர்' ஆடும் வரை ஈழ 'நல்லூர்' அடங்காது", "தமிழனின் தனித்துவத்தை தடுக்காதே", "தலைகள் குனியும் நிலையில் இனியும் தமிழன் இல்லையடா", "பீட்டா எம் இனத்தின் எதிரி - நின்று பார் எம் நெருப்பின் முன்னால்", "பண்பாட்டை சிதைக்காதே - எம் பண்பாட்டை மறவோம்", ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கி இருந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில், தமிழின மரபு விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை அந்நாட்டு நீதித்துறை நீக்க வேண்டும். அங்கே மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். முத்துக்குமார் உட்பட பலர் ஈழத்தமிழர்களாகிய நாம் ஈழத்தில் உரிமைகளுடன் வாழவேண்டும் என வலியுறுத்தி தம் இன்னுயிரையே கொடுத்திருந்தார்கள். இன்று அவர்களின் மரபின் மீது அடக்குமுறை விதிக்கப்படுவதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் தான் இந்தப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டது என்றனர்.
யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சமூகவலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்ற போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.