தமிழ் தொடர்களில் 'கோலங்கள்', 'கஸ்தூரி' போன்ற தொடர்கள் 1,500 நாட்களைக் கடந்து ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்தது ஒரு காலம். தற்போது ஒளிபரப்பாகி வரும் 5 சீரியல்கள் ஆயிரம் நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த ஐந்தும் கொஞ்சம் கூட டெம்போ குறையாமல் இருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.
சரவணன் மீனாட்சி
மூன்று ஆண்டுகளை அனாயாசமாக கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் தொடர் 'சரவணன் மீனாட்சி'. எஸ்.என்.லட்சுமி, சோபனா எனப் பாட்டி வேடத்தில் நடித்த மூத்த நடிகைகள் இறந்தது; இந்த நாடகத்தில் ஜோடியாக நடித்த செந்தில் - ஶ்ரீஜா நிஜத்திலும் ஜோடியானது எனப் பல நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவியைக் கடந்து வேறு ஒரு சேனலில் அதிக நாள் ஒளிபரப்பாகி வரும் தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வள்ளி
என்.சுந்தரஷேஷ்வரன் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் சன் டிவியில் தினமும் மதியம் 3 மணிக்கு நான்- ப்ரைம் டைம்மில் ஹிட் அடித்த தொடராகும். வித்யா மோகன், ராஜ்குமார், அஜய் ஆனந்த் , லதா, ராணி, லக்ஷ்மிராஜ், ராஜசேகர் பூவிலங்கு மோகன், வியட்நாம் வீடு சுந்தரம், டாக்டர் ஷர்மிளா, மனோகர், கண்யா, கவிதா, தேவ் ஆனந்த், ஆடம்ஸ், பாண்டு எனப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருப்பது அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். மூத்த நடிகை ஜோதிலட்சுமி இதில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் காலமானார். அவரது கேரக்டரில் நடிகை லதா நடித்து வருகிறார்.
வாணி ராணி
தொடர்ந்து நான்காவது முறையாக ராதிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் தொடர். வேணு அரவிந்த், பப்லு, ரவிக்குமார் என ராதிகாவின் சேம் ஓல்ட் டீம். ஆயிரத்து நூறு நாட்களைக் கடந்தாலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் - 5 க்குள் தற்போது இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் மெக தொடர் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. வருடக்கணக்கு வைத்தால் கடந்த 21-ம் தேதியோடு நான்கு வருடங்களை நிறைவு செய்துள்ளது. ஒரு கேரக்டரில் வாணியாகக் கெத்தான வழக்கறிஞராகவும் மற்றொரு கேரக்டரில் அப்பாவி குடும்பப்பெண் ராணியாவும் ராதிகா வெரட்டிகாட்டிப் பின்னுகிறார். சீரியல் ஆக்டர்களில் உடன் நடிப்பவர்களை தூக்கி சாப்பிட்டு விடும் வேணு அரவிந்துக்கு சவால் விடும் வகையில் பப்லு நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தெய்வமகள்
"அண்ணியாரே" என பிரகாஷ் கொடுக்கும் குரல் தமிழ்நாட்டில் ஏகப்பிரச்சித்தம். ஒட்டுமொத்த முன்னாள் கணவன் குடும்பத்தையும் ஆல் டைம் ஹை பிரஷரில் வைத்திருக்கும் காயத்திரியை சபிக்காதவர்களே இல்லை எனலாம். சத்யப்பிரியா என்கிற கேரக்டரில் நாயகியாக இதில் வந்த பிறகு, வாணி போஜன் தமிழ் சீரியல் மார்க்கெட்டில் வலுவான இடத்தைப் பிடித்துவிட்டார். விதவிதமான வில்லன்கள், அப்பாவித்தனத்தால் சொத்தை இழக்கும் மனிதர்கள் என இந்தசீரியல், டிஆர்பியில் ஆல் டைம் டாப் லிஸ்டில் உள்ளது.
வம்சம்
தெய்வமகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு துவங்கப்பட்ட சீரியல். ரம்யா கிருஷ்ணன் டபுள் ஆக்ட். வெரைட்டியான கேரக்டர்கள் இந்த தொடரின் பலம். ஹிப்னாட்டிக் மருந்து, வாழைப்பழ ரெமிடி எனப் பல ட்விஸ்ட்கள், லாஜிக் கேள்விகளுக்குச் சவால் விட்டாலும் பரபரப்புக்கு பஞ்சமேயில்லை. ஆயிரத்து நூறு நாட்களை விரைவில் கடக்கஉள்ளது. கதை போகும் போக்கைப் பார்த்தால் இப்போதைக்கு முடியும் என்றே சொல்ல முடியாது.