தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏழு மணி நேரம் இருந்தார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 5-ஆம் தேதி முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதன்பின், கடந்த 7 ஆம் தேதியன்று தன்னிடம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜிநாமா கடிதம் பெறப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
இந்தப் புகார் கூறியதற்குப் பிறகு அவர் தலைமைச் செயலகம் வரவில்லை. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெரும் அரசியல் புயல் கிளம்பி வரும் சூழ்நிலையில் அவர் திங்கள்கிழமை பிற்பகல் தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.
தலைமைச் செயலக சங்கத்தினரிடம் அவர் ஆலோசனை நடத்தினார். மேலும், மரணம் அடைந்த சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு நிவாரண நிதி உதவியை அறிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து உயரதிகாரிகளிடம் அவர் ஆலோசித்தார்.
இரவு 8 மணிக்கு...:
பிற்பகல் 1.05 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த அவர் இரவு 8 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் அவர் அதைத் தவிர்த்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இரவு 8.30 மணியளவில், மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., சரவணன் ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து அவருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
-- நன்றி தினமணி