
சட்டசபையில் நேற்று (பிப்.,18) முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான தி.மு.க., மற்றும் ஓ.பி.எஸ்., அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். அந்த கோரிக்கை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.
கடும் அமளி:
பின்னர், சட்டசபையில் தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இடையே பெரும் அமளி ஏற்பட்டது. நாற்காலிகள் துாக்கி வீசப்பட்டன. மைக் உடைக்கப்பட்டன. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அவை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். எதிர்கட்சிகள் இல்லாத நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி அதில் பழனிசாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
கவர்னரிடம் புகார்:
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை அமளி குறித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பை அங்கீகரிக்கக்கூடாது என்றும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில், மும்பை சென்றுள்ள கவர்னர் வித்யாசாகர் ராவ், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம் அறிக்கை கேட்டுள்ளார்.