சென்னை: சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க பன்னீர் தரப்பில் அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பொங்கிய பன்னீர்:
கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா செய்த சதியை, கடந்த 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன், முதல்வர் பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். அவரிடம் இருந்து, முதல்வர் பதவியை பறிக்க, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதையும், அவர் அம்பலப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக அ.தி.முக., தொண்டர்களும், தமிழக மக்களும் அணி வகுத்துள்ளனர். இதுவரை ஓ.பி.எஸ்., அணியில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 8 ஆகவும், ஆதரவு எம்.பி.,க்களின் எண்ணிக்கை 12 ஆகவும் உள்ளது.
அதிரடி திட்டம்:
இந்நிலையில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க சசிகலா அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க பன்னீர் தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக சசி தரப்பிற்கு ஆதரவான கூடுதல் எஸ்.பி., ஜெயச்சந்திரன் கன்னியாகுமரிக்கு நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். தொடர்ந்து உளவுத்துறையில் உள்ள தனது ஆதரவு அதிகாரிகள் மூலம், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் தற்போதைய செல்போன்கள் சேகரிக்கப்பட்டு, ரகசிய பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் பலனாகவே மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன், பன்னீர் தரப்பில் இணைந்தார். தொடர்ந்து கூவத்தூரிலுள்ள எம்.எல்.ஏ.,க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அபரேஷன் கூவத்தூர்:
இன்று(பிப்.,14) சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில் சசிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில், கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிரடி ஆய்வு செய்து, அங்கிருந்து வெளியேற விரும்பும் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து செல்ல பன்னீர் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருவேளை சசிக்கு ஆதவாக தீர்ப்பு வரும் பட்சத்தில், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க கவர்னர் உத்தவரவிடுவார். அப்போது தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, சசி கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் தனக்கு ஆதரவாக ஓட்டளிக்கவும் பன்னீர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-- நன்றி தினமலர்