தமிழக அரசியல் நிலவரம் தமிழகத்தில் மட்டுமல்ல; அகில இந்திய அளவிலும் பிரிவை ஏற்படுத்திவிடும்போல, நகமும் சதையுமாக இருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் அதிர்ச்சிகரமாக பிளவுபட்டு நிற்கிறார்கள். இவர்கள் இருவருக்குமிடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்து இப்போது பாஜக, அரசியலமைப்பு சட்டம், கவர்னர் மௌனம் என நாலா திசைகளிலும் விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
அறுதிப்பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் இருப்பதாக இரண்டு முறை மனு கொடுத்துப் பார்த்தும் இன்றுவரை கவர்னர் அசைந்துகொடுக்கவில்லை. அதேசமயம் ஒவ்வொரு அரைநாளும் சசிகலா அணியிலிருந்து ஒரு எம்.எல்.ஏ, ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த எரிச்சலில் 'பொறுமைக்கும் ஓர் எல்லை' உண்டு என சசிகலா பதற்றப்படுகிறார். கவர்னரின் இந்த மௌனத்தின் பின்னணி மத்திய அரசு என நினைக்கிறது சசிதரப்பு. அதை சூசகமாக சொல்லவும் ஆரம்பித்துவிட்டார். இந்த நேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களுடன் களமிறங்கியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ஆளுநர் அரசியலமைப்புச்சட்டத்தை பின்பற்றி முடிவெடுக்கவேண்டும் என்று தெரிவித்த கையோடு நேற்றுமுன்தினம் சென்னைக்கு விமானம் ஏறி வந்து ஆளுநரை சந்தித்தார்.
அந்த சந்திப்பில் ஆளுநரிடம் தமிழக நிலவரம் குறித்து அக்கறையுடன் பேசிய சுவாமி, தமிழக அரசியல் நிலவரங்களில் மத்திய அரசுக்கு எந்தவிதமான லாபம் அடையவும் விரும்பலாம். ஆனால் ஒரு ஆளுநராக நீங்கள் அதற்கு ஒத்துப்போய்விடக்கூடாது. மக்களின் மனோபாவம், பொதுக்கருத்து, உள்ளிட்ட பிரச்னைகளை நீங்கள் கருதி முடிவெடுத்தால்அது பின்னாளில் உங்களுக்கே கூட சட்டசிக்கலை ஏற்படுத்திவிடும். அதனால் சசிகலாவை உடனடியாக ஆட்சியமைக்க அழையுங்கள்” என்றவர், தமிழகத்தில் இதற்கு முன் அரசியல் ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்ட சில முன்னாள் ஆளுநர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அப்படியான அவப்பெயர் எடுக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாராம்.
சுவாமியின் கருத்தை கேட்டுக்கொண்ட ஆளுநர், தான் பாஜகவைச் சேர்ந்தவன் என்றாலும் தனக்கு அரசியல் ரீதியான பார்வையை எப்போதும் வைத்துக்கொள்ளமாட்டேன் எனத் தெரிவித்தவர். தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாக ஒரு முதல்வரே எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு கடிதம் தந்திருக்கிறார். அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் இன்னொரு தரப்பை ஆட்சியமைக்க அழைப்பது சட்ட சிக்கலுக்குள்ளாக்கிவிடும். மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் பல நுணுக்கமான விஷயங்களையும் கவனிக்கவேண்டியதிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் தன்னை முதலில் சந்திக்கவந்தபோது எம்.எல்.ஏக்களின் பட்டியலைத்தான் தந்தார். ஆதரவுக்கடிதங்கள் தரப்படவில்லை” என்ற ஆளுநர்,' இதுபற்றியெல்லாம் சட்ட நிபுணர்களிடம் தொடர்ந்து தான் விவாதித்துவருவதாக தெரிவித்தாராம்.
ஆனால் சுவாமி விடாப்பிடியாக , நீங்கள் இதுபற்றி பலரிடமும் பேசி நேரத்தை வீணடிக்கவேண்டாம். 'எஸ்.ஆர் பொம்மை வழக்கில்’ 9 நீதிபதிகள் கொண்ட குழு வழங்கிய தீர்ப்பில் மாநில ஆளுநருக்கான உரிமைகளும் கடமைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அதைப்படித்துப்பார்த்து ஒரு முடிவெடுங்கள். தாமதம் செய்ய வேணடாம்” என்று கேட்டுக்கொண்ட சுவாமி, “அதற்கான தேதியை எனக்குத் தெரிவியுங்கள்” என சொன்னதை ஆளுநர் ரசிக்கவில்லையாம். ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவை வறுத்தெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் தேவையின்றி கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தன்னை சந்தித்ததும் ஆளுநருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த சந்திப்பு இருவருக்குமே சுமூகமாக அமையவில்லை என்கிறார்கள்.
எஸ்.ஆர்.பொம்மைஇதன் எதிரொலியாகத்தான் சுவாமி மறுதினம், நாளைக்குள் ஆட்சி அமைக்க அழைக்கவில்லையென்றால் யாராவது நீதிமன்றத்தின் கதவுகளை தட்டலாமே என ட்வீட் செய்திருந்தாராம்.
ஜெயலலிதாவின் இறுதிக்காலத்தில் அவருடன் சுமூக நட்பு பாராட்டிவந்த தான், சில தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் சசிகலாவை எதிர்ப்பது தெரிந்தும் சுப்பிரமணியன் சுவாமி இப்படி நடப்பது பிரதமர் மோடிக்கும் வருத்தமாம். இதுதொடர்பாக இருவருக்குமே தொலைபேசி வழி காரசாரமான ஓர் உரையாடல் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. “ஜெயலலிதா எனக்கு சொன்ன சில தகவல்களின் அடிப்படையில் தனக்கு சசிகலாவை பிடிக்கவில்லை. அதேசமயம் தான் ஓ.பி.எஸ்ஸையும் ஆதரிக்கவில்லை. அதைப் புரிந்துகொண்டு நீங்களும் நடந்துகொள்ளுங்கள்” என பிரதமர் சுவாமியிடம் சொன்னாராம்.
இந்த விவகாரம் குறித்து சுவாமியின் நண்பர்கள் சிலர், “தேவையில்லாமல் இந்தவிஷயத்தில் நீங்கள் மூக்கை நுழைத்து மோடியிடம் அதிருப்தி அடையவேண்டுமா...உங்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டால் என்ன ஆகும்” என கேட்டனராம். அதற்கு சத்தமாக சிரித்த சுவாமி, “பாஜகவில் என்னை கட்டுப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது. தனிப்பட்ட முறையில் எனக்கு சசிகலாவா , பன்னீர்செல்வமா என்பதெல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. எதிர்காலத்தில் இவர்களிடம் போய் ஆதாயம் பார்க்கவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. யாராக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இரண்டு தனிமனிதர்களின் லாப நட்டத்தைவிட அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பு குறைந்துவிடக்கூடாது என்பதுதான் என் நோக்கம். என் நோக்கத்தை புரிந்துகொள்ளாதவர்கள் நான் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறுவது அவர்களின் அறியாமை. சசிகலா இன்று முதல்வராக முடியாத அளவுக்கு சட்டச் சிக்கலுக்குள்ளாகியிருப்பதற்கு நான் தொடுத்த வழக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
நான் இப்படி ஒரு முயற்சி எடுக்கவில்லையென்றால்தான் எதிர்காலத்தில் கட்சிக்குத்தான் நீங்காத அவப்பெயர் ஏற்படும். அந்த நல்ல நோக்கத்தில்தான் ஆளுநரை காணச் சென்றேன். தைரியம் இருந்தால் அது தவறென்று சொல்லி என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும்... அப்புறம் பார்க்கலாம்” என சத்தமாக சொல்லி சிரித்தாராம்.