கூவத்தூரில் இருக்கும் கோல்டன் பே ரிசார்ட் மீது தான் தற்போது தமிழகத்தில் அனைவரின் கவனமும் உள்ளது. முதலில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புகார். அடுத்து இங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் என்ற புகார். நேற்று சசிகலா இங்கு யாரையும் அடைத்து வைக்கவில்லை என பேச தமிழகம் முழுவதும் ரிசார்ட்டை சுற்றியே உள்ளது.
டாக் ஆஃப்தி டவுனாக இருக்கும் இந்த விடுதி எப்படி இருக்கும். உள்ளே எம்.எல்.ஏக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கான ஒருநாள் செலவு என பல செய்திகள் வந்தாலும் தற்போது மோசமான பாதிப்பு ஒன்று ரிசார்ட்டுக்கு வந்துள்ளது. இந்த ஆபத்து கூகுள் மூலம் வந்துள்ளது தான் ஆச்சர்யம். கூகுள் மேப்ஸில் பதியப்பட்டிருக்கும் இந்த ரிசார்ட் அங்கு தங்குபவர்களின் ரிவியூக்களால் கெத்தாக இருந்தது. சராசரியாக 4 ஸ்டார் என்ற அளவில் இருந்த ரிசார்ட்டின் ரேட்டிங் கடந்த ஒரு வாரத்தில் வெகுவாக குறைந்து 3.4 என்ற மோசமான ரேட்டிங்கில் உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட 1 ஸ்டார் ரிவியூக்களால் மதிப்பை இழந்துள்ளது
அதில் வந்திருக்கும் கமென்ட்டுகள் எம்.எல்.ஏக்களுக்கு ஏன் ஆதரவு தருகிறது, மொத்த தமிழகமும் இங்கு தான் முடங்கியுள்ளது. எம்.எல்.ஏக்கள் ஒளிந்து கொள்ள ஏற்ற இடமாக இது உள்ளது. என 50-க்கும் மேற்பட்ட ரிவியூக்களை அள்ளி வழங்கியதோடு மோசமான கமென்ட்டுகளை குவித்துள்ளனர்.
இதற்காக சில ரிசார்ட்காரர்களும் சமீபத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து இந்த சரிவை சரிசெய்யப்பார்த்துள்ளனர். ஆனாலும் ரேட்டிங் இறங்குமுகத்திலேயே உள்ளது. இதனை மக்கள் செய்வது இது முதல் முறையல்ல பிக் பில்லியன் டேக்களின்போது பொருட்கள் கிடைக்காத மக்கள் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு 1 ஸ்டார் ரேட்டிங்களை அள்ளி வழங்கினர்.
தனிப்பட்ட ஒரு நிறுவனமாக இருந்தாலும் மக்கள் விருப்பத்துக்கு எதிராக இருந்தால் ஸ்டார் ரேட்டிங்கில் கீழ் இறக்குவது மக்களின் ஆன்லைன் மனநிலையாக உள்ளது. இதே விஷயம் தான் கோல்டன் பே ரிசார்ட்டுக்கும் நடந்துள்ளது. நாளையே எம்.எல்.ஏக்கள் இந்த ரிசார்ட்டை விட்டுச் சென்றாலும் இந்த ரேட்டிங் மாறாது. வெளிநாட்டு பயணிகளுக்கு இங்கு நடக்கும் அரசியல் சூழலால் இந்த ரேட்டிங் குறைந்துள்ளது என்றும் தெரியாது. அவர்கள் பார்வையில் குறைவான ரேட்டிங் கொண்டது என்பதே இருக்கும். இதனால் அதன் வர்த்தகமும் பாதிப்படையும்.
யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம். ஆனால் சமீபகாலமாக அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் சில நிறுவனங்களின் ரேட்டிங்கை குறைத்துள்ளது. இதே விஷயம் தான் அப்போலோ மருத்துவமனை விவகாரத்திலும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-- நன்றி விகடன்