
ம.பி.,யில், போபால் - உஜ்ஜயின் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, உ.பி.,யின் லக்னோவில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சயிபுல்லாவை, போலீசார் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர்.
உ.பி.,யின் கான்பூரில் வசிக்கும், அவனது தந்தை முகமது சர்தாஸ், 'நான் ஒரு இந்தியன்; நாட்டுக்கு எதிராக செயல்பட்ட சயிபுல்லா ஒரு துரோகி; அவன் உடலை வாங்க மாட்டேன்' என்றார்.பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், சர்தாஸின் நடவடிக்கைக்கு, பார்லிமென்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாவது கட்டத்தின் முதல் நாளான நேற்று, லோக்சபாவில் இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய சயிபுல்லாவை உயிருடன் பிடிப்பதற்கு, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது பலனளிக்கவில்லை. கொல்லப்பட்டது, தன் மகனாக இருந்த போதும், நாட்டுப்பற்றுடன் செயல்பட்ட, சர்தாஸை பாராட்டுகிறேன்.
தேசத்துக்கு எதிராக செயல்பட்ட தன் மகனை துரோகி எனக்கூறி, உடலை கூட வாங்க மறுத்துள்ள சர்தாஜை, அனைத்து, எம்.பி.,க்களும் பாராட்டுவர் என,எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து, அனைத்து, எம்.பி.,க்களும் மேஜையை தட்டி, ராஜ்நாத் சிங்கின் கருத்தை ஆமோதித்தனர்.
என்.ஐ.ஏ., விசாரணை:
லோக்சபாவில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேலும் கூறியதாவது:ம.பி.,யில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் உ.பி.,யில் பயங்கரவாதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும்.இந்த சம்பவத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின்படி, ம.பி., - உ.பி., அரசுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ஆறு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.