
இதையடுத்து, முதல்வர் பழனிச்சாமி முதல் கொண்டு, எல்லோரையும் நிர்வகித்து, கட்சியை நடத்தி வருகிறார் தினகரன். சசிகலா, நியமன பொதுச் செயலரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் கமிஷனில் கொடுத்த புகாருக்கு, தேர்தல் கமிஷன், சசிகலாவிடம் விளக்கம் கேட்டது. சசிகலாவின் விளக்கத்தை, தேர்தல் கமிஷனுக்கு எடுத்துச் சென்று கொடுத்தது, தினகரன் தான்.
போயஸ் கார்டனில் இருந்தபடி ‛நாட்டாண்மை':போயஸ் தோட்டத்திலேயே தங்கியிருந்து, இப்படி கட்சி வேலைகளை பார்த்து வரும் தினகரனுக்கு, அமைச்சர் அந்தஸ்து அளிக்க சசிகலா ஆசைப்படுகிறார். அதற்காக, அவரை, டில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.
இது தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:கட்சியில் இருந்து, ஜெயலலிதாவால், நிரந்தரமாக நீக்கப்பட்ட தினகரனை, ஒரே நாளில் கட்சியில் சேர்த்து, துணைப் பொதுச் செயலர் பதவியையும், சசிகலா வழங்கியதை ஏற்காத கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவருக்கு, கூடுதலாக தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி பதவியையும் வழங்க சசிகலா முன்வந்திருப்பது, ஏற்க முடியாதது. இந்தப் பதவியை, கட்சியில் நீண்ட காலமாக விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டும், ஜெயலலிதா வழங்கினார். அந்த வகையில் கடைசியாக ஜக்கையனுக்கு, அந்தப் பதவி வழங்கப்பட்டது.அவர், பதவி விலகியதும், அந்தப் பதவி காலியாக உள்ளது. டில்லியில், அந்த பதவிக்காக, சிறப்பான அலுவலகம் இருக்கிறது. சென்னை, தலைமைச் செயலகத்திலும், தனியாக அலுவலகம் இருக்கிறது. அலுவலக உதவியாளர், கார், பாதுகாப்பு என, ஒரு அமைச்சருக்குரிய எல்லா வசதிகளும், அந்த பதவிக்கு இருப்பதால், அதையும், தனது குடும்பத்தைச் சேர்ந்த தினகரனுக்கே வழங்க சசிகலா முடிவெடுத்திருப்பது, ஏற்கத்தக்கதல்ல.
கட்சியில் எத்தனையோ பேர், நீண்ட காலம் உழைத்து விசுவாசியாக இருந்து, சிறு அந்தஸ்தையும் அனுபவிக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பை கொடுக்காமல், தினகரனுக்கு மட்டும், மேலும் மேலும் பொறுப்புகளை கொடுப்பது நியாயமல்ல.ஏற்கனவே திவாகரன் உள்பட சசிகலா குடும்பத்துக்குள்ளும், நிறைய பேர், பொறுப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இத்தனையையும் மீறி, சசிகலா, தினகரனை, டில்லி சிறப்பு பிரதிநிதியாக அறிவித்தால், கட்சியில் இருந்து ஒரு பெரும் படை, பன்னீர்செல்வம் பக்கம் செல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.