
பயங்கரவாதத்திற்கு ஆதரவு:
சர்வதேச மனித உரிமை குழுவின் 34வது கூட்டத்தில், இந்திய தூதர் அஜித்குமார் பேசியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்தும் காஷ்மீரில் நிலவும் அமைதியான சூழ்நிலையை கெடுத்து வரும் பாகிஸ்தான், அங்கு வன்முறையை தூண்டிவிட்டும் ஆதரவு அளித்தும் வருகிறது. பயங்கரவாதம், படுமோசமான மனித உரிமை மீறல் ஆகும். பயங்கரவாதத்திற்கு மையப்புள்ளியாக விளங்கும் நாடு தற்போது மனித உரிமை பற்றி பேசுகிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது. தற்போது, அவர்களாலேயே பாகிஸ்தான் அவதிப்பட்டு வருகிறது.
நடவடிக்கை:
பாகிஸ்தான் ஆதரிக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதமே, காஷ்மீரில் பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம். பல ஆண்டுகளாக செய்ததை போல் தற்போதும், காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்து அமைதியை சீர்குலைக்க பார்க்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. யாரும் இதில் தலையிட முடியாது. பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், அமைதியை நிலைநாட்ட, இந்திய அரசும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் நடவடிக்கை எடுத்தன. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.