பீஜிங்: அருணாச்சல பிரதேசம் மீது இல்லாத உரிமையை, சட்டபூர்வமாக நிலை நாட்டிக் கொள்ளவே, பூடானுடன் எல்லைப் பிரச்னை உள்ளதாக, சீனா முதன் முதலாக அறிவித்துள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பூடானின் கிழக்குப் பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை, தனக்கு சொந்தமான தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை, இந்தியா மறுத்து வருகிறது.இந்நிலையில், பூடான் உடனான எல்லை, மறுவரையறை செய்யப்படாததால், அந்நாட்டின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு எல்லைகளில் பிரச்னை உள்ளதாக, சீனா முதல் முறையாக பகிரங்கமாக அறிவித்து உள்ளது. இதில், கிழக்கு எல்லையை ஒட்டித் தான், அருணாச்சல பிரதேசம் உள்ளது. அதனால், அருணாச்சல பிரதேசத்தின் மீதான உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள, சீனா, பூடானுடன் எல்லை பிரச்னையை கிளப்பி உள்ளது.
புரூக்கிங்ஸ் இந்தியா ஆராய்ச்சி மையத்தின், அயல்நாட்டு அரசியல் ஆய்வாளர், கான்ஸ்டான்டினோ சேவியர் கூறியதாவது:பூடானின் மூன்று எல்லைப் பகுதிகள் தொடர்பாக, சீனாவுக்கு பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. ஆனால், அருணாச்சல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாட மேலும் வலுவான காரணம் வேண்டும் என, சீனா கருதுகிறது. அதற்காகவே, இந்தியா - சீனா இடையிலான தற்போதைய பதற்றமான சூழலில், இந்த பிரச்னையை சீனா கிளறியுள்ளது. இதன் மூலம், இந்தியா-பூடான் இடையே மோதலை உண்டாக்க சீனா முயற்சிக்கிறது.
ஆனால், இது, பூமராங் போல, சீனாவுக்கு எதிராகவே திரும்பும். பூடானுடனான அரசியல் பூர்வ இணக்கத்தை, சீனா இழக்கும். அது, பூடான் - இந்தியாவின் ராஜீய உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும்.இவ்வாறு, அவர் கூறினார். அருணாச்சல பிரதேச விவகாரம் மட்டுமின்றி, பூடானுடன், இந்தியாவுக்கு துாதரக உறவு இல்லாததும், எல்லை பிரச்னையை சீனா கையிலெடுக்க காரணம் என, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்