முசபராபாத் : ஜீலம் மற்றும் நீலம் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்ட பாகிஸ்தான், சீனாவிற்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜீலம் நீலம் ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு 2.4 பில்லியன் டாலர் செலவாகும்.
இந்த திட்டத்திற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முசாபராபாத் நகரில், பல இடங்களில் போராட்டம் நடந்தது மிகப்பெரிய பேரணியும் நடந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாகிஸ்தான் சீனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த அணை கட்டுமானத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். சர்ச்சைக்குரிய பகுதியில், எந்த சட்டத்தின் அடிப்படையில் அணை கட்டுவதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தானும்,சீனாவும் ஐ.நா., விதிகளை மீறியுள்ளன. அணை கட்டுமானத்தை நிறுத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.
இந்த பிரச்னையை சர்வதேச அளவிற்கு எடுத்து செல்லும் வகையில் டுவிட்டரில் ''#SaveRiversSaveAJK'' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தனர்.