வாஷிங்டன்: அமெரிக்க மாநிலச் செயலாளர் மைக் பாம்பியோ விரைவில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். டிக் டாக் உடன் மேலும் சில சீன செயலிகளையும் தடை செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தபோது அவர் இச்செய்தியை வெளியிட்டார்.
சீன ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள் அமெரிக்கர்களின் தனிநபர் தகவல்களை நோட்டம் விடுவதாகவும் திருடுவதும் அமெரிக்க அரசு கருதுகிறது. சீன கம்யூனிச அரசு அமெரிக்க அரசியல் தலைவர்களின் தனிநபர் தகவல்களை எடுத்து அமெரிக்காவை உளவு பார்க்க நினைக்கிறது என கூறப்படுகிறது.
இதனால் சீன செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா இடையே நடைபெற்ற வர்த்தக போர், சமீபத்திய வைரஸ் பரவல் சர்ச்சை, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் சீன அரசின் போக்கு ஆகியவற்றால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் டிக் டாக் செயலியை உருவாக்கிய சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும். இந்தியாவைத் தொடர்ந்து தற்போது வல்லரசு நாடான அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்வதால் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சீன அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கும் ஹாங்காங் அரசு விரைவில் சீன செயலியான டிக்டாக்கில் தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பல நாடுகள் சீனாவுக்கு வியாபார ரீதியாக நெருக்கடி கொடுத்து வருவது சீனாவுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.