வாஷிங்டன்: ''இந்தியாவில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து, அமெரிக்காவில் அரசியலாக்கப்பட்டு, தடை செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது,'' என, அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக பிரிவு இயக்குனர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மலேரியா தடுப்பு மருந்தான, ஹைட்ராக்சிக்ளோரோக்வின், 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இதை, இந்தியா கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தி, இறப்பு விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால், இந்த மருந்தை, அமெரிக்காவில் சில ஊடகங்களும், மருத்துவத் துறையில் சில பிரிவினரும் அரசியலாக்கி விட்டனர். இந்த மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படும் என, தேவையற்ற பீதியை கிளப்பி, டிரம்புக்கு எதிரான போராக மாற்றிவிட்டனர்.
இது ஆபத்தான மருந்து என்பது அபத்தமான வாதம். கொரோனா நோயாளிகளின், முதல் ஏழு நாட்கள் மிக முக்கியம். அப்போது, இந்த மருந்தை வழங்கினால், நுரையீரல் செல்களில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம். இந்த மருந்தை பயன்படுத்திய நோயாளிகளில், 50 சதவீதத்தினரின் இறப்பு தடுக்கப்பட்டுள்ளதை, ஜே.ஐ.டி., மருத்துவ இதழின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், டெட்ராய்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அவசர சிகிச்சைக்கு, ஹைட் ராக்சிக்ளோரோக்வின் மருந்தை பயன்படுத்த அனுமதி கோரி உள்ளனர். இந்த மருந்தால், இறப்பு விகிதம் குறைவது நிரூபணமானால், இந்த மருந்தின் பயன் குறித்து, அதிபர் டிரம்ப் கூறியது உண்மை என்பது தெரியவரும். அத்துடன், இந்த மருந்தை பயன்படுத்த தவறியதால், ஆயிரக்கணக்கானோரை பறி கொடுத்த தவறும் புரிய வரும். இவ்வாறு, அவர் பேசினார்.