திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு குறித்து சுங்கத்துறை, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், றமீஸ் உள்ளிட்ட சிலரிடம் என்.ஐ.ஏ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் வளைத்து வளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்வப்னாவுடன் நட்பில் இருந்த முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகள் சிவசங்கரனிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், என்.ஐ.ஏ 5 மணி நேரம் விசாரணை நடத்தியது. மேலும், வரும் திங்கள்கிழமை சிவசங்கரனிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரானைக்காக அவரை என்.ஐ.ஏ கொச்சிக்கு அழைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பைசல் ஃபரீத்தை துபாயில் அந்நாட்டு போலீஸார் கைது செய்திருந்தனர். அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துபாயில் இருந்து தூதரக பார்சல் என்ற பெயரில் தங்கத்தை அனுப்பி வைப்பது பைசல் ஃபரீத் எனத் தெரியவந்துள்ளது.தூதரக பார்சலில் கடத்திய தங்கம்
இந்த வழக்கு விசாரணை தொடங்கிய சமயத்தில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். அதில் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக அதிகாரி கூறியதால் பார்சலை விடுவிக்கும்படி விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிக்கு போன் செய்ததாகக் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக துணைத் தூதர் ராஷத் அல் ஷெமீல் டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் அவரது நாட்டுக்குச் சென்றுவிட்டார். இதுவும் அந்த சமயத்தில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி மீது விமர்சனத்தைக் கிளப்பியது.
மேலும், ஸ்வப்னா இதற்கு முன்பு கேரள ஐகோர்ட்டில் அளித்த முன் ஜாமின் மனுவில், "துணைத் தூதரின் பரிந்துரையின் பேரிலே பார்சலை விடுவிக்கும்படி நான் போனில் சுங்கத்துறை அதிகாரியிடம் கூறினேன்" என்று குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஸரித், சந்தீப் நாயர், றமீஸ் ஆகியோர் சுங்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், ``தங்கம் கடத்தலில் துணைத் தூதருக்கு உரிய பங்கு சென்றுவிடும்" எனக் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்வப்னா சுரேஷ்
இந்த நிலையில் தூதரக பார்சல் மூலம் கடத்தப்படும் தங்கத்தின் எடைக்கு ஏற்ப துணைத் தூதருக்கு பங்குத்தொகை அளிப்பது குறித்து ஸ்வப்னா சுரேஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். ஸ்வப்னா சுரேஷ் சுங்கத்துறை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், "தங்கம் கடத்துவது துணைத் தூதருக்கு தெரியும். ஒரு கிலோ தங்கம் கடத்த அவருக்கு 1,000 டாலர் வழங்குவோம். முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் என் நல்ல நண்பர் மட்டும்தான்" எனக் கூறியிருக்கிறார். அதே சமயம் சிவசங்கரனுக்கும் தங்கம் கடத்தலுக்கும் பங்கு உள்ளதா என்ற கேள்விக்கு ஸ்வப்னா வெளிப்படையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தங்கம் கடத்தலில் துணைத் தூதருக்கு பங்குத்தொகை வழங்குவதாக ஸ்வப்னா கூறியது இந்த வழக்கு விசாரணையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Also Read: பினராயி விஜயன் அலுவலக சிசிடிவி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ! - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்
http://dlvr.it/RcLW92
Saturday, 25 July 2020
Home »
» கேரளா: `தங்கம் கடத்தலில் துணை தூதருக்கு பங்கு!’ - விசாரணையில் அதிரவைத்த ஸ்வப்னா